ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான முழுமையான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதை விட சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டிக்கு தான் ரசிகர்களிடம் வழக்கம் போல அதிகப்படியான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஏனெனில் தலா 5 கோப்பைகளை வென்றுள்ள சென்னை மும்பையும் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளாகவும் பரம எதிரிகளாகவும் வலம் வருகின்றன. எல் கிளாசிக்கோ என்று வர்ணிக்கப்படும் அப்போட்டி இம்முறை 2 முறை நடைபெற உள்ளது. அதில் முதல் போட்டி மார்ச் 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
பாண்டியாவுக்கு தடை:
ஆனால் அந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை கடந்த வருடம் கழற்றி விட்ட மும்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே ஒவ்வொரு போட்டியிலும் உச்சகட்ட எதிர்ப்புகள் தெரிவித்தது வேறு கதை.
அந்த எதிர்ப்புக்கு மத்தியில் சுமாராக விளையாடிய மும்பை கடைசி இடத்தைப் பிடித்து முதல் அணியாக வெளியேறியது. அந்தத் தொடரில் பாண்டியா தலைமையில் 3 போட்டிகளில் மும்பை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்கவில்லை. குறிப்பாக மே 17ஆம் தேதி லக்னோவுக்கு எதிரான தங்களது கடைசி போட்டியில் பாண்டியா தலைமையில் மும்பை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை.
காரணம் என்ன:
அதில் முதல் 2 போட்டிகளில் பாண்டியாவுக்கு மட்டும் அபராதத்தை விதித்த ஐபிஎல் நிர்வாகம் 3வது முறையாக விதிமுறையை மீறியதால் 30 லட்சம் அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதித்தது. அந்தப் போட்டி தான் வரும் மார்ச் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. எனவே அந்த ஒரு போட்டியில் பாண்டியாவால் மும்பை அணிக்காக விளையாட முடியாது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: முதல் கோப்பையை வெல்லுமா.. பெங்களூரு ஆர்சிபி அணியின் முழு அட்டவணை இதோ
அதனால் சூரியகுமார் யாதவ் மும்பை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் அவர் தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மொத்தத்தில் கடந்த வருடம் ரசிகர்களின் விமர்சனங்களை சந்தித்த பாண்டியா இந்த வருடம் சிறப்பாக விளையாடி மும்பைக்கு கோப்பையை வென்று கொடுத்து அவர்களின் மனதைக் குளிர்விக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.



