- Advertisement -
ஐ.பி.எல்

பாண்டியாவுடன் மொத்த மும்பைக்கும்.. குஜராத் கோச்.. நெஹ்ராவுக்கும் 2 தண்டனை விதித்த பிசிசிஐ.. காரணம் என்ன?

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே ஆறாம் தேதி மும்பையில் 56வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மும்பை அணியை சொந்த மண்ணில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலாவதாக விளையாடிய மும்பை போராடி 156 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய குஜராத்துக்கு கேப்டன் கில் 43, பட்லர் 30, ரூதர்போர்ட் 28 ரன்கள் எடுத்தனர்.

அதனால் 18 ஓவரில் 132/6 ரன்கள் எடுத்த குஜராத் வெற்றியை நெருங்கிய போது மழை வந்தது. அப்போது 19 ஓவராக குறைக்கப்பட்ட போட்டியில் குஜராத்துக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. தீபக் சஹார் வீசிய அந்த ஓவரில் குஜராத் 15 ரன்கள் அடித்து கடைசி பந்தில் தங்களுடைய 8வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

பாண்டியாவுக்கு அபராதம்:

கடைசி நேரத்தில் ராகுல் திவாட்டியா 11*, ஜெரால்டு கோட்சி 12 (அவுட்), அர்சத் கான் 1* ரன்கள் எடுத்து குஜராத் வெற்றிக்கு உதவினர். மறுபுறம் கடந்த 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி நடைப் போட்டு வந்த மும்பை 3வது தோல்வியைச் சந்தித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் வீசி முடிக்கவில்லை.

அதனால் கடைசி ஓவரில் உள்வட்டத்திற்கு வெளியே ஒரு ஃபீல்டரை குறைத்து களத்திலேயே நடுவர் தண்டனை வழங்கி இருந்தார். அது போக ஏற்கனவே இந்த வருடம் பாண்டியா தலைமையில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை. எனவே 2வது முறையாக மீண்டும் மும்பை அதே தவறை செய்துள்ளதால் அந்த அணியின் கேப்டன் பாண்டியாவுக்கு 24 லட்சம் அபராதத்தை பிசிசிஐ விதித்துள்ளது.

- Advertisement -

நெஹ்ராவுக்கும் தண்டனை:

மற்ற அனைத்து மும்பை வீரர்களுக்கும் தலா 6 லட்சம் அல்லது 25% போட்டி சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இது போக அந்தப் போட்டியில் இரவு 12.09 மணிக்கே மழை நின்று விட்டதால் போட்டியை துவங்குமாறு நடுவர்களிடம் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா காரசாரமாக வாதிட்டார்.

இதையும் படிங்க: சிராஜ், துஷார், ஷர்துல், சந்தீப் ஆகியோருக்கு அடுத்து 5 ஆவது வீரராக மோசமான சாதனையை நிகழ்த்திய – ஹார்டிக் பாண்டியா

ஆனால் களத்தில் ஈரமான பகுதிகளை உலர்த்துவதற்கு தாமதம் ஏற்பட்டதால் நடுவர்கள் 12.25 மணிக்கு தான் போட்டியை துவங்கினார்கள். அந்த வகையில் நடுவர்களிடம் விதிமுறையை மீறி வாதிட்டதற்காக குஜராத் பயிற்சியாளர் நெஹ்ராவுக்கு 25% போட்டி சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அத்துடன் அவருக்கு ஒரு கருப்பு புள்ளி தண்டனையாக வழங்கப்படுவதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது.

- Advertisement -