தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மிகச் சிறப்பாக பந்துவீசி 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இதன் காரணமாக உடனடியாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி அவருக்கு இடம் கொடுத்தது. முதன்முதலாக வலைப்பயிற்சியில் பந்துவீசும் பந்துவீச்சாளராக இருந்த இவர் வருண் சக்கரவர்த்திக்கு காயமான பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்தார். மேலும் வலைப்பயிற்சியில் மிகச் சிறப்பாக பந்து வீச அவருக்கு ஒருநாள் அணியில் இடம் கொடுக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத நடராஜன் மூன்றாவது போட்டியில் விளையாடினார்.
அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அதனால் தான் சர்வதேச டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமாகினார்.
இந்த டி20 தொடரிலும் முதல் போட்டியில் 3 விக்கெட்டும் இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி தொடரை வெல்ல மிகப்பெரிய காரணமாக இருந்தார் நடராஜன். இந்த மிகச் சிறப்பான பந்துவீச்சு பற்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடராஜன் குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில் : “நான் நடராஜனின் ஆட்டத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய வாழ்க்கை சூழல் அவர்களது பின்னணி இதனை எல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருக்கிறது. அவர் நம்பிக்கை வைத்து மட்டுமே கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார்.
இந்தத் தொடரில் அபாரமாக பந்துவீசி கொண்டிருக்கிறார். மேலும் இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய தூணாகவும் அமைத்திருக்கிறார். எப்போதெல்லாம் இந்திய அணிக்கு தேவையோ அப்போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவரிடம் இந்திய அணிக்காக வெற்றியை தேடிக் கொடுக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார் ஹர்பஜன் சிங்.
மேலும் இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது அவருக்கு கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏனெனில் தொடர்ச்சியாக சிறப்பாக வீசி வரும் அவர் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர் நாயகன் விருதை பெற்றால் அது அவரின் நம்பிக்கையை இன்னும் உயர்த்துவதாக இருக்கும். மேலும் இது இந்திய அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அவர் எங்கிருந்து வந்தார் அணிக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது சிறந்த கதை என்று ஹர்பஜன் கூறியது குறிப்பிடத்தக்கது.