கடந்த 2024-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து தானாக முன்வந்து வெளியேறி மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். மேலும் மெகா ஏலத்தில் தான் கலந்துகொள்ளும் பட்சத்தில் தனக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்றும் ரசிகர்களிடமும் சமூக வலைதளத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
ரிஷப் பண்ட்டால் லக்னோ அணிக்கு ஆபத்து : ஹர்பஜன் சிங்
அந்த வகையில் நடைபெற்று முடிந்த 2025 மெகா ஏலத்தில் லக்னோ அணிக்காக 27 கோடி ரூபாய் என்கிற பெரிய விலைக்கு ஏலம் போன ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக சாதனை நிகழ்த்தி இருந்தார். இப்படி மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போன இவரது செயல்பாடு இந்த தொடரில் எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் நடைபெற்று வரும் 2025 ஐ.பி.எல் தொடரில் லக்னோ அணிக்காக முதல் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 ரன்கள் சராசரியுடன் வெறும் 17 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் லக்னோ அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள வேளையில் அவரது மோசமான பேட்டிங்கே அந்த அணியின் தொடர் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது ரிஷப் பண்டின் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ரிஷப் பண்ட் விளையாடி வரும் விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் இதுவரை நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெரிய அளவில் எதையும் செய்யவில்லை.
விரைவில் அவரது ஆட்டத்தில் முன்னேற்றத்தை கொண்டுவர வேண்டும் இல்லையெனில் அது லக்னோ அணிக்கு தான் பெரிய பாதிப்பாக அமையும். அதிரடியாக ஆசைப்பட்டு அவர் விரைவில் ஆட்டமிழந்து வருகிறார். எனவே அதனை தவிர்த்து மிகப் பெரிய ஸ்கோரை அடிப்பதற்கான வழியை கண்டுபிடித்தாக வேண்டும். இல்லையெனில் நிச்சயம் இந்த தொடரில் லக்னோ அணி பெரிய சரிவை சந்திக்கும்.
இதையும் படிங்க : மும்பை அணியிலிருந்து வெளியேறி கோவா அணியில் விளையாட இருக்கும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – என்ன காரணம்?
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கூட பூரான் மிகச் சிறப்பாக விளையாடிய நேரத்தில் பண்ட் ஆட்டமிழந்தது போட்டியில் பெரிய பாதகத்தை ஏற்படுத்தியது. இம்முறை பஞ்சாப் அணி மிகச் சிறப்பான ஒரு அணியாக தயாராகியுள்ளது. ரிக்கி பாண்டிங் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது கூட்டணியின் கீழ் அந்த அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



