அவர் நங்கூரமா இல்லனா விராட் கோலி ஸ்டாரா வந்துருக்க முடியாது – கழற்றி விடப்பட்ட நட்சத்திர வீரருக்கு ஹர்பஜன் ஆதரவு

Harbhajan Singh
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை அணியில் ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்யாமல் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருந்த அஸ்வினை தேர்ந்தெடுக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Pujara

- Advertisement -

அதை விட நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் என்று போற்றப்படும் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகிய மூவருமே ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்வியை கொடுத்தது. அப்படிப்பட்ட நிலையில் ஃபைனலில் சந்தித்த தோல்வியின் மொத்த பலியையும் புஜாரா மீது போட்டு அதிரடியாக கழற்றி விட்டது ஏன் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். குறிப்பாக சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் இல்லாத காரணத்தால் யார் கேட்கப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் விராட் கோலி, ரோஹித் போன்றவர்களை காப்பாற்ற ஒவ்வொரு முறையும் புஜாரா நீக்கப்படுவதாக அவர் வெளிப்படையாக தேர்வுக்குழுவை சாடினார்.

நங்கூரமான புஜாரா:
அத்துடன் கத்துக்குட்டி வெஸ்ட் இண்டீஸை அடிக்க விராட் கோலி, ரோஹித் எதற்கு என்றும் அவர் நியாயமான கேள்விகளை கேட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நங்கூரமாக செயல்பட்டு விராட் கோலி போன்ற இதர பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவித்து நட்சத்திரங்களாக உருவெடுக்கும் வேலையை புஜாரா செய்ததாக ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். அதாவது எந்த வகையான கிரிக்கெட்டிலும் ஒருபுறம் நிதானமாக நின்று மொத்த அழுத்தத்தையும் உள்வாங்கி மெதுவாக ஒரு பேட்ஸ்மேன் விளையாடினால் எதிர்ப்புறம் விளையாடும் மற்றொரு பேட்ஸ்மேன் எளிதாக ரன்களை குவிப்பார்கள்.

அப்படி பார்ப்பதற்கு சுமாராக மெதுவாக விளையாடுகிறார் என்ற கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் அந்த அசிங்கமான வேலையை செய்த புஜாரா கழற்றி விடப்பட்டது தமக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கும் ஹர்பஜன் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “புஜாரா செய்துள்ள சாதனைகளுக்காக அவர் மீது நான் நிறைய மரியாதை வைத்துள்ளேன். சொல்லப்போனால் அவர் இந்திய டெஸ்ட் அணியில் கடந்த பல வருடங்களாக பாராட்டப்படாத ஹீரோவாக இருந்து வருகிறார். குறிப்பாக இந்திய அணியின் தூண்களில் ஒருவரான அவர் நங்கூரமாக நின்று இதர பேட்ஸ்மேன்கள் கச்சிதமாக செயல்பட்டு பெரிய ரன்களை குவிக்க உதவிய அசிங்கமான வேலையை செய்த பெருமைக்குரியவர்”

- Advertisement -

“அப்படிப்பட்ட அவருக்கு இன்னும் சற்று அதிகமான மரியாதையை கொடுத்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர் அணியிலிருந்து அதிரடியாக கழற்றி விடப்பட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. ஏனெனில் அவர் மட்டும் நம்முடைய அணியில் ரன்கள் அடிக்காமல் இருக்கவில்லை. மாறாக இதே அணியில் அவர் அடித்த அதே சராசரியில் அதே ரன்களை அடித்த சில வீரர்கள் இருக்கின்றனர்” என்று கூறினார்.

Harbhajan

அவர் கூறுவது போல அறிமுகமானது முதலே களத்தில் நங்கூரத்தை போட்டு அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து பெரிய ரன்களை குவிக்கும் ஸ்டைலை கொண்ட புஜாரா 103 போட்டிகளில் 7195 ரன்களை 43.60 என்ற சராசரியில் குவித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். சொல்லப்போனால் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் 2019 – 20 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை முதல் முறையாக வென்று இந்தியா சரித்திரம் படைப்பதற்கு 500க்கும் மேற்பட்ட ரன்களை விளாசிய புஜாரா தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க:அவர் நங்கூரமா இல்லனா விராட் கோலி ஸ்டாரா வந்துருக்க முடியாது – கழற்றி விடப்பட்ட நட்சத்திர வீரருக்கு ஹர்பஜன் ஆதரவு

அதே போல 2020 – 21 தொடரிலும் பாறையைப் போல நின்று உடம்பில் அடிவாங்கி முக்கிய ரன்களை எடுத்த அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு நிகராக நடத்தப்படுவதற்கு தகுதியுடையவர் என்றாலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்வியின் பலிகிடாவாக கழற்றி விடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement