
ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி லண்டனில் துவங்குகிறது. அங்குள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அவ்விரு அணிகளை பொறுத்த வரை 2023இல் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது.
1999, 2023 உலகக் கோப்பை செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது உட்பட ஆஸ்திரேலிய அணி காலம் காலமாக ஐசிசி தொடர்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மறுபுறம் தென்னாப்பிரிக்கா முக்கிய நேரங்களில் சொதப்பி தோல்வியை சந்திப்பதால் சோக்கர் என்ற பட்டத்தைக் கொண்டிருக்கிறது. எனவே இம்முறையும் ஆஸ்திரேலியா அணி தென்னாபிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் தென்னாப்பிரிக்காவை விட ஆஷஸ் தொடரில் விளையாடிய அனுபவம் ஆஸ்திரேலியாவுக்கு அதிகம் இருப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எனவே அந்த அனுபவத்தை வைத்து ஆஸ்திரேலிய அணி இம்முறையும் கோப்பையை வெல்லும் என்று அவர் கணித்துள்ளார். இது பற்றி ஹர்பஜன் சிங் பேசியது பின்வருமாறு.
“ஆஸ்திரேலியா தயாராக இருப்பார்கள். அவர்கள் இங்கிலாந்தில் ஆஷஸ், கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட நிறைய கிரிக்கெட்டை விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்கள். அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவர்கள் தென்னாப்பிரிக்காவை விட இங்குள்ள சூழ்நிலைகளை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்”
“அது போக ஆஸ்திரேலியா சாம்பியன் அணி. பெரிய போட்டிகளில் நீங்கள் அழுத்தத்தை எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பது முக்கியம். ஆஸ்திரேலியர்கள் அதில் மாஸ்டர்கள். அவர்கள் மற்றவர்களை விட அதிக கோப்பையை வென்றுள்ளார்கள். கமின்ஸ் அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய லீடர். அனைத்தையும் விட அவர் மிகச்சிறந்த மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்தவர்”
இதையும் படிங்க: இவங்க தான் உலகின் அடுத்த ஃபேப் 4 பேட்ஸ்மேன்கள்.. 2 இந்தியர்கள் உட்பட கேன் வில்லியம்சன் தேர்வு
“அவரைப் போன்ற கேப்டன் தலைமையில் நீங்கள் அனைவரும் செல்லும் போது நிறைய போட்டிகளை வெல்ல முடியும். அதுவே அவரை ஸ்பெஷல் ஆஸ்திரேலிய கேப்டனாக மாற்றுகிறது” என்று கூறினார். அதே சமயம் தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா உள்ளிட்ட தரமான பவுலர்கள் இருக்கிறார்கள். எனவே அப்போட்டி இந்தியா போன்ற பொதுவான நாட்டைச் சேர்ந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று நம்பலாம்.