
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. குரூப் சுற்றில் ஏ பிரிவில் 3 வெற்றிகளைப் பெற்ற இந்தியாவும் பி பிரிவின் 2 வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியாவும் அப்போட்டியில் மோதுகின்றன. அந்தப் போட்டி மார்ச் 4ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.
முன்னதாக நியூஸிலாந்துக்கு எதிரான தங்களது கடைசி லீக் போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி தனது முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதனால் நாக் அவுட் சுற்றில் அவர் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் பேட்ஸ்மேன்கள் தடுமாறும் அளவுக்கு வருண் சக்கரவர்த்தியிடம் என்ன மேஜிக் இருக்கிறது என்பதையும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார். அத்துடன் நாக் அவுட் சுற்றில் இந்தியா தங்களது பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாமல் 4 ஸ்பின்னர்களுடன் விளையாட வேண்டும் என்றும் ஹர்பஜன் அறிவுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“வருண் சக்கரவர்த்தியிடன் 2 மேஜிக் பகுதிகள் இருக்கிறது. ஒன்று சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அதிகமாக விளையாடவில்லை. அதனால் அவரைப் பற்றி எதிரணிக்கு தெரிவதில்லை. அவரால் என்னக் கொண்டு வர முடியும் என்பதும் எதிரணிகளுக்கு தெரிவதில்லை. அவருடைய கைகளின் வேகம் கொஞ்சம் வேகமாக இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் அவருடைய கைகளைப் பார்ப்பதில்லை. மாறாக பந்தை அவர் தரையில் பிட்ச் செய்த பின் படிக்க முயற்சிக்கிறார்கள்”
“அது மிகவும் கடினமானது. பேட்ஸ்மேன்கள் யாராக அதைச் செய்வதற்கு ஸ்பின்னர்கள் எப்படி பௌலிங் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க அவர்களுடைய கையைப் பார்க்க வேண்டும். உங்களை நோக்கி என்ன வேரியேஷன் வருகிறது அதை எப்படி அடிக்கலாம் என்று பார்க்க வேண்டும். அந்த விஷயத்தில் தான் நியூசிலாந்து தவறு செய்தது. இங்கிலாந்துக்கு எதிராக நிறைய விக்கெட்டுகள் எடுத்து வந்துள்ள வருண் முழு தன்னம்பிக்கையைக் கொண்டுள்ளார்”
இதையும் படிங்க: 48 மணி நேரம் தான் இருக்கு.. ஆஸிக்கு எதிரா இந்த 2 விஷயத்தை செஞ்சா இந்தியா ஜெயிக்கும்.. சாஸ்திரி அட்வைஸ்
“இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றும் அவர் அதை செமி ஃபைனல் மற்றும் ஃபைனலிலும் செய்வார் என்று நம்புகிறேன். துபாயில் நமது பின்னர்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்தோம். எனவே ஆஸ்திரேலியா அல்லது ஃபைனலில் தென்னாப்பிரிக்கா அல்லது மீண்டும் நியூசிலாந்து வந்தாலும் இதே அணி தொடர வேண்டும். நம்முடைய 4 ஸ்பின்னர்கள் வெற்றிக்கான சாவியாக இருப்பார்கள். துபாயில் சுழலை நன்றாக எதிர்கொண்டு, பௌலிங் செய்பவர்கள் வெல்லலாம். எனவே இந்தியா சரியான தேர்வை செய்துள்ளது” என்று கூறினார்.