
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகின்றது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய வழிகாட்டுதலில் இந்தியா வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
குறிப்பாக கடந்த 2024இல் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அந்த வேதனை தீர்வதற்குள் கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 25 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் தோற்றது. அந்தத் தோல்விகளுக்கு சுழலுக்கு சாதகமான பிட்ச் வேண்டும் என்ற கௌதம் கம்பீரின் அணுகுமுறை தவறான தேர்வு, அடிக்கடி செய்யும் மாற்றங்கள் ஆகியவை முக்கிய காரணமானது.
எனவே இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கௌதம் கம்பீர் விலக வேண்டும் என்று ஏராளமான ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும் பிசிசிஐ அதற்கு செவி சாய்க்காமல் இருப்பது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்சமயத்தில் கௌதம் கம்பீர் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு மோசமான நிலைமை உருவாகவில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இதே நிலைமை தொடர்ந்தால் வருங்காலத்தில் கம்பீரை இந்திய டெஸ்ட் அணியிலிருந்து கழற்றி விட்டு பிரத்தியேக பயிற்சியாளரை நியமிக்கலாம் என்றும் அவர் ரசிகர்களின் கருத்தை எதிரொலித்து பேசியுள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் நம்முடைய கலாச்சாரம் என்னவெனில், அணி நன்றாக விளையாடும் போது அனைவரும் அமைதியாக இருப்பார்கள்”
“ஆனால் இந்திய அணி மோசமாக விளையாடும் போது நாம் பயிற்சியாளர் மேலே விமர்சனங்கள் வைக்கிறோம். உண்மையில் கௌதம் கம்பீர் களத்திற்கு சென்று விளையாடுவதில்லை. விளையாடிய காலங்களில் அவர் இந்தியாவுக்காக நன்றாகவே விளையாடினார். எனவே அனைவரும் கொஞ்சம் அமைதி காக்க வேண்டும்”
இதையும் படிங்க: கில் இல்லை.. அந்த இந்திய வீரர் தான் உலகின் அடுத்த சாம்பியன் டெஸ்ட் பேட்ஸ்மேனாக வருவாரு.. மார்க் வாக்
“ஒருவேளை நீங்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு ஒரு பயிற்சியாளரும் சிவப்பு நிறப்பந்து கிரிக்கெட்டுக்கு ஒரு பயிற்சியாளரும் தேவை என்று கருதினால், அதை செய்வதற்கு தற்போது எந்த அவசியமும் இல்லை. ஆனால் வருங்காலங்களில் அப்படி ஒரு நிலைமை தேவைப்பட்டால் கண்டிப்பாக அதை நீங்கள் செய்தாக வேண்டும். அப்படி செய்வதில் எந்த தவறும் இல்லை” என்று கூறினார்.