ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. நேற்று ஏப்ரல் 30ஆம் தேதி பஞ்சாப்புக்கு எதிரானப் போட்டியில் சென்னை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதையும் சேர்த்து இந்த வருடம் 10 போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ள சென்னை புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை வலுவாக பிடித்துள்ளது.
அதனால் 2020, 2022, 2024க்குப்பின் 4வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் சிஎஸ்கே வெளியேறியுள்ளது. அத்துடன் வரலாற்றிலேயே முதல் அடுத்தடுத்த வருடங்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சிஎஸ்கே வெளியேறியுள்ளது சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே தோனி சொன்னது போல 2026இல் கம்பேக் கொடுப்பதற்காக சிஎஸ்கே புதிய அணியை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
ஜொலிக்காத அஸ்வின்:
அது போன்ற சூழ்நிலையில் 9.75 கோடிக்கு வாங்கப்பட்ட மூத்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த வருடம் சிஎஸ்கே அணியிலிருந்து கழற்றி விடப்படுவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர் இந்த வருடம் 7 இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை 9.29 என்ற மோசமான சராசரியில் எடுத்து சுமாராகவே செயல்பட்டுள்ளார். அதனாலேயே இந்த வருடம் சிஎஸ்கே அணியால் முழுமையாக அவருக்கு வாய்ப்புகளை கொடுக்க முடியவில்லை.
எனவே அவரை கழற்றி விட்டு அதிலிருந்து கிடைக்கும் 9.75 கோடிக்கு தற்சமயத்தில் ஃபார்மில் உள்ள வீரர்களை சிஎஸ்கே வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினை சரியாகப் பயன்படுத்தாமல் குறை சொல்வது சரியல்ல என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
ஹர்பஜன் அதிருப்தி:
“சென்னை அணி சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் அணியை தேர்ந்தெடுக்கவில்லை. இன்று பஞ்சாப்புக்கு எதிராக அஸ்வின், நூர் அஹ்மத், ஜடேஜா ஆகியோர் ஒன்றாக விளையாடியிருந்தால் சிஎஸ்கே போட்டியை வென்றிருக்கக்கூடும். நீங்கள் அஸ்வினுக்கு 10 கோடிகள் கொடுத்து பெஞ்சில் அமர வைத்துள்ளீர்கள். அவரை ஏன் விளையாடுவதில்லை வைக்கவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை”
இதையும் படிங்க: சி.எஸ்.கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அரங்கேறிய அரிய நிகழ்வு – விவரம் இதோ
“அவர் சிஎஸ்கே அணியில் யாரிடமோ சண்டையிட்டது போல் தெரிகிறது. உண்மையில் அவர் மட்டும் நன்றாக விளையாடாமல் இல்லை. சிஎஸ்கே அணியில் உள்ள மற்றவர்களும் சுமாராகவே செயல்பட்டுள்ளார்கள். ஆனால் அஸ்வின் மட்டும் வெளியில் இருக்கிறார். பஞ்சாப்புக்கு எதிராக அவர்கள் விளையாடியிருக்க வேண்டும். ஏனெனில் அந்தப் போட்டியில் பந்து நன்றாக சுழன்றது” என்று கூறினார்.



