சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஆறாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
சி.எஸ்.கே – பஞ்சாப் போட்டியில் நடந்த அரிய நிகழ்வு :
அதே வேளையில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த தொடரில் தங்களது எட்டாவது தோல்வியை பதிவு செய்து நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கான போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக சாம் கரன் 88 ரன்களையும், பிரேவிஸ் 32 ரன்களையும் குவித்தனர். பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது :
19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 54 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடக்காத அரிய நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
அதாவது இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக துவக்க வீரர்களாக ஷேக் ரஷீத் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் களமிறங்கினர். அதேபோன்று பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக துவக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஸ் ஆர்யா ஆகியோரும் களமிறங்கினர். இப்படி இரண்டு அணிகளிலுமே களமிறங்கிய துவக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் சர்வதேச போட்டிகளில் ஆடாத இந்திய வீரர்களாக இருக்கின்றனர்.
இதையும் படிங்க : நான் சாதனைக்காக விளையாடுபவன் கிடையாது.. அதுக்காக அப்படிப்பட்ட பைத்தியமும் கிடையாது.. ரோஹித் பேட்டி
இப்படி ஐபிஎல் போட்டி ஒன்றில் இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாத நான்கு இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் துவக்க வீரர்களாக களமிறங்குவது முதல் முறையாகும். சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



