ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்தது. ஆனால் பெங்களூரு அணிக்கு எதிராக 197 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோற்ற சென்னை அணி ராஜஸ்தானுக்கு எதிராக 183 இலக்கைத் துரத்த முடியாமல் தோல்வியை சந்தித்தது. இது போக கடந்த 2019க்குப்பின் 180+ இலக்கைத் துரத்திய 9 போட்டிகளிலும் சென்னை தோல்வியை சந்தித்துள்ளது.
அதனால் அந்த அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக தோனி மேலே பேட்டிங் செய்ய வராதது ஏன்? என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வரலாற்றின் சிறந்த ஃபினிஷராக அறியப்படும் தோனி 2023க்குப்பின் வெற்றிகரமாக சேசிங் செய்யப் போட்டியில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் விமர்சனம்:
எனவே இந்த குப்பைப் போன்ற ஆட்டத்தை யார் பார்ப்பார்கள்? என்றும் அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதனால் தோனி பேட்டிங் செய்ய மேலே வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஹர்பஜன் ஆதாரத்துடன் பேசியது பின்வருமாறு.
“உங்களிடம் நான் சில புள்ளி விவரங்களை கொடுக்க விரும்புகிறேன். சிறந்த வீரரான தோனி சார் பேட்டிங் செய்ய வந்த போது போட்டி கிட்டத்தட்ட முடிந்து விட்டது”
“2023 ஐபிஎல் முதல் வெற்றி பெற்றப் போட்டிகளில் தோனி 9 பந்துகளில் வெறும் 3 ரன்களை எடுத்துள்ளார். ஒரு பவுண்டரி, சிக்சர் கூட அடிக்கவில்லை. அதாவது தோனி வெற்றிப் பெற்ற போட்டிகளில் வெறும் 8 என்ற சராசரியைக் கொண்டுள்ளார். அதே தோனி தோல்வியை சந்தித்த போட்டிகளில் 13 பவுண்டரி 13 சிக்ஸர்கள் உட்பட 84 பந்தில் 166 ரன்களை 49 என்ற சராசரியில் எடுத்துள்ளார்”
ஹர்பஜன் அட்வைஸ்:
“இப்படி விளையாடி தோல்வியை சந்திக்கும் போட்டியை யார் பார்க்க விரும்புவார்கள்? இந்த பெரியப் பிரச்சனையை சிஎஸ்கே தீர்க்க வேண்டும். இதை சென்னை அணி நிர்வாகம் வித்தியாசமாகப் பார்த்து தோனியை முன்னதாகவே பேட்டிங் செய்ய அனுப்ப வேண்டும். அவரை அடிக்கச் சொல்லுங்கள். ஏனெனில் ரன்கள் முக்கியம்”
இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியின் மூலம் நடப்பு ஆண்டின் முதல் நபராக ஜோப்ரா ஆர்ச்சர் – நிகழ்த்திய சாதனை
“இப்போதும் அவரால் அடிக்க முடியும். அவருடைய தற்போதைய புள்ளி விவரங்கள் நன்றாக இல்லை” என்று கூறினார். இருப்பினும் வயது மற்றும் முழங்காலில் செய்த அறுவை சிகிச்சை காரணமாகவே தோனி கீழே பேட்டிங் செய்வதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் டாப் ஆர்டர் கணிசமான ரன்கள் குவிக்கத் தடுமாறுவதாலேயே கடைசியில் தோனியாலும் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



