ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தோனி மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை கேப்டனாக வென்ற அவரை சென்னை ரசிகர்கள் தல என்று அழைக்கின்றனர். அப்படிப்பட்ட ரசிகர்களுக்காக தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று தோனி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அந்த சூழ்நிலையில் கடந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார். அந்த வாய்ப்பில் கடைசி நேரத்தில் களமிறங்கி பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய அவர் வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்து ரசிகர்களை மகிழ்வித்தார். ஆனால் ருதுராஜ் தலைமையில் தடுமாற்றமாகவே விளையாடிய சென்னை தங்களது கடைசிப் போட்டியில் பெங்களூருவிடம் தோற்றது.
கோபமான தோனி:
அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று சென்னையில் நடைபெற்ற ஃபைனலில் விளையாடி கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் வழியனுப்பும் வாய்ப்பையும் சிஎஸ்கே நழுவ விட்டது. மறுபுறம் சிஎஸ்கே அணிக்கு எதிராக வென்றதை கோப்பை வென்றதற்கு நிகராக ஆர்சிபி வீரர்கள் வெறித்தனமாக கொண்டாடினர். இந்நிலையில் அப்போட்டியின் முடிவில் கை கொடுக்க வரிசையில் வந்த தோனி ஆர்சிபி ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்த்து மேலும் கோபமடைந்து வெளியேறியதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
அந்த கோபத்தால் உடைமாற்றும் அறையில் ஒரு எல்ஈடி திரையை தோனி தனது கையால் குத்தியதாகவும் ஹர்பஜன் கூறியுள்ளார். அந்த தருணமே சென்னை மண்ணில் கோப்பையை வென்று ஐபிஎல் கேரியரை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்ற தோனியின் கனவை நொறுக்கிய தருணம் என்றும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆர்சிபி தங்களுடைய உரிமைகளுக்கு உட்பட்டு கொண்டாடினார்கள்”
உடைந்த தோனியின் கனவு:
“அந்தளவுக்கு அவர்கள் நன்றாக விளையாடிய தகுதி பெற்றார்கள். மறுபுறம் சிஎஸ்கே அணியினர் கை கொடுப்பதற்காக வரிசை கட்டினர். ஆர்சிபி அணி தன்னுடைய கொண்டாட்டத்தை முடிக்க அதிக நேரத்தை எடுத்துக் கொண்டனர். அதனால் அங்கிருந்து சென்ற தோனி உடைமாற்றும் அறைக்குள் ஒரு ஸ்கிரீனை குத்தினார். உண்மையில் விளையாட்டில் இது போன்ற தோல்விகள் சகஜம்”
இதையும் படிங்க: கடும் காய்ச்சலிலும் மும்பை அணிக்காக ஷர்துல் தாகூர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் – விவரம் இதோ
“ஆர்சிபி சில நிமிடங்கள் அதிகம் கொண்டாடினாலும் அது அவர்களுடைய உரிமை. தோனி அங்கிருந்து சென்றதும் பரவாயில்லை. அதுவே அந்த நேரத்தில் அவருடைய செயல்முறையாக இருந்திருக்கலாம். ஒருவேளை அப்போட்டியில் வென்று கோப்பையுடன் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த தோனியின் எண்ணம் அந்த நேரத்தில் உடைந்திருக்கலாம்” என்று கூறினார்.



