
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியை அதனுடைய சொந்த மண்ணில் டெல்லி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது விமர்சனங்களை எழுப்பியது. இந்த வருடம் 27 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு லக்னோ அணிக்காக விளையாடும் அவர் இதுவரை பெரிய ரன்கள் அடிக்கவில்லை.
அந்த சூழ்நிலையில் டெல்லிக்கு எதிராக கடைசி ஓவரில் களமிறங்கிய அவர் 2 பந்துகளை எதிர்கொண்டு ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்து டக் அவுட்டானார். அப்படி அவுட்டாவதற்கு முன்பாக ரிஷப் பண்ட் பவுண்டரி எல்லையில் ஆலோசகர் ஜஹீர் கானுடன் காரசாரமாக விவாதித்தார். குறிப்பாக என்னை தாமதமாக களமிறங்க வைத்ததால் இப்போது நிலைமையைப் பாருங்கள் என்ற வகையில் அவர் பேசியிருக்கலாம் என்பது அந்த காட்சியில் தெரிந்தது.
இந்நிலையில் ரிஷப் பண்ட் 7வது இடத்தில் களமிறங்கும் முடிவை எடுத்திருக்க மாட்டார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஒருவேளை அவர் அந்த முடிவை எடுத்திருந்தால் இப்படி கோபப்பட்டிருக்க மாட்டார் என்றும் ஹர்பஜன் கூறியுள்ளார். மேலும் அந்த நிலைமைகளை சிரித்த முகத்துடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தான் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்றும் ஹர்பஜன் சந்தேகித்துள்ளார்.
ஏனெனில் சஞ்சீவ் கோயங்கா எதற்கெடுத்தாலும் களத்திற்கு வந்து ராகுல் முதல் ரிஷப் பண்ட் வரை தமது கேப்டன்களை பொதுவெளியில் திட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளதை அனைவரும் அறிவோம். எனவே கேப்டனை சுதந்திரமாக விளையாடாமல் பெயருக்காக மட்டும் வைத்திருந்தால் கண்டிப்பாக வெல்ல முடியாது என்று ஹர்பஜன் சாடியுள்ளார். இது பற்று ஹர்பஜன் பேசியது பின்வருமாறு.
“ரிஷப் பண்ட் ஏன் 7வது இடத்தில் விளையாடினார்? என்பது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அதை நான் புரிய முயற்சிக்கிறேன். அவருக்கு முன் அப்துல் சமத், ஆயுஷ் படோனி ஆகியோர் விளையாடினார்கள். இது யாருடைய முடிவு? ஒன்று அவருடையதாக இருக்கலாம் அல்லது அணி நிர்வாகத்தின் முடிவாக இருக்கலாம். ஆனால் பண்ட் அதற்காக கோபமாக இருந்தார்”
இதையும் படிங்க: அதை நோக்கி திரும்பியுள்ள சிஎஸ்கே தங்கள் பலத்தை வெச்சு.. ஹைதராபாத்தை வீழ்த்தும்.. சஞ்சய் பங்கர் நம்பிக்கை
“அவரிடம் யாரோ ஏதோ சொல்லியிருக்கிறார்கள். அதனாலேயே அவர் மகிழ்ச்சியாக இல்லை. இது என்னுடைய கருத்து. ரிஷப் பண்ட் பற்றி அவர்கள் ஏதோ விவாதித்திருக்கிறார்கள். அது அவரை அதிருப்தியடைய வைத்துள்ளது. ரிஷப் பண்ட் இளையவர்கள் மற்றும் மூத்தவர்களை மதிக்கக்கூடியவர் என்பது நமக்குத் தெரியும். அவர் மோசமான ஃபார்மில் இருந்தால் அதற்காக நீங்கள் 7வது இடத்தில் விளையாட வைக்கலாமா? அவர் உங்களுடைய கேப்டன். உங்களுடைய கேப்டன் மகிழ்ச்சியாக இல்லையெனில் எப்படி அணி வெல்லும்?” என்று கூறினார்.