
ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7 முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இந்தியாவுக்கு விளையாட நாங்கள் வரமாட்டோம் என்று வங்கதேச வாரியம் அறிவித்துள்ளது. எனவே தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதிக்குமாறு வங்கதேச வாரியம் ஐசிசி அமைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளது.
சமீபத்தில் வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளி வந்தன. அந்த தாக்குதலில் சில மக்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு அண்டை நாடான இந்தியாவை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அத்துடன் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தஃபீசூர் ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்றும் எதிர்ப்புகள் உருவானது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா நிர்வாகத்தை பிசிசிஐ அறிவுறுத்தியது. அதை உடனடியாக ஏற்றுக்கொண்ட கொல்கத்தா அவரை அணியிலிருந்து விடுவித்தது வங்கதேச ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. அதற்கு பதிலடியாகவே 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு விளையாட வர மாட்டோம் என்று வங்கதேச வாரியம் அறிவித்துள்ளது.
சொல்லப்போனால் அதோடு நிற்காத வங்கதேசம் 2026 ஐபிஎல் தொடரை தங்களுடைய நாட்டில் ஒளிபரப்புவதற்கும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பையில் விளையாட வங்கதேசம் உட்பட அனைத்து அணிகளையும் இந்தியா மனதார வரவேற்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஒருவேளை அதையும் தாண்டி இந்தியாவுக்கு வரவில்லை என்றால் அது வங்கதேசத்தின் விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் வங்கதேசத்தில் மக்களுக்கு எதிராக நடந்தது கண்டிப்பாக தவறு என்று ஹர்பஜன் கூறியுள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “சில நாட்களாக நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் காரணமாக வங்கதேசம் இந்தியா வருவதற்கு விரும்பவில்லை. ஆனால் வங்கதேசத்தில் என்ன நடந்ததோ அது தவறானது. இனிமேல் ஐசிசி தான் அவர்களுடைய கோரிக்கை பற்றிய முடிவை எடுக்க வேண்டும். எங்களைப் பொறுத்த வரை இந்தியாவுக்கு நாங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்”
இதையும் படிங்க: முகமது சிராஜை டி20 உலககோப்பை தொடருக்கு தேர்வு செய்யாததுக்கு இதுவே காரணம் – ஏ.பி.டி விளக்கம்
“ஆனால் வங்கதேசம் இங்கே வருகிறார்களா இல்லையா என்பது அவர்களுடைய விருப்பம்” என்று கூறினார். இதற்கிடையே பாகிஸ்தான் அணியும் இந்தியாவுக்கு வர முடியாது என்று ஏற்கனவே தெரிவித்து விட்டது. அதனால் ஏற்கனவே பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளது. அந்த சூழ்நிலையில் தற்போது வங்கதேச அணியும் இலங்கையில் விளையாட முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.