ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்க் 22ஆம் தேதி துவங்குகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனி களமிறங்குவது ரசிகர்களிடம் வழக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். மேலும் 43 வயதைத் தொட்டு விட்ட அவர் சமீப காலங்களில் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
அதனால் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே தோனி பேட்டிங் செய்ய வருகிறார். ஆனால் அந்த வாய்ப்பிலும் வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் வருடம் முழுவதும் வேறு எங்கேயும் விளையாடாத தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் 2.5 மாதங்கள் விளையாட கடினமாக உழைப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் பாராட்டு:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சமீபத்தில் எங்களுடைய நண்பரின் மகள் திருமணத்திற்கு சென்ற போது தோனியை பார்த்தேன். அங்கே மிகவும் ஃபிட்டாக இருந்த அவரிடம் இதற்காக என்ன செய்கிறீர்கள்? இது கடினமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கு ஆம் கடினமாக இருக்கிறது. ஆனால் இதை மட்டுமே என்னால் செய்ய முடியும் இதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. களத்திற்கு சென்று விளையாட விரும்புகிறேன் என்று தோனி சொன்னார்”
“அப்படி உங்களிடம் பசி இருக்கும் வரை நன்றாக விளையாட முடியும். வருடம் முழுவதும் விளையாடாமல் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவது மிகவும் கடினம். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தோனி காண்பிக்கிறார். சொல்லப்போனால் அவர் அந்த வாய்ப்பில் மற்றவர்களை விட சிறப்பாக அனைத்து பவுலர்களையும் டாமினேட் செய்து விளையாடுகிறார்”
மின்னல் வேக கீப்பிங்:
“ஐபிஎல் தொடருக்காக 2 மாதங்கள் அவர் எடுக்கும் பயிற்சியில் டைமிங், போக்கு, சிக்ஸ் அடிக்கும் திறன் ஆகியவை அடங்கும். அதற்காக அவர் சென்னையில் ஒரு நாளைக்கு 2 – 3 மணி நேரம் பயிற்சி எடுக்கிறார். பயிற்சிக் களத்திற்கு முதல் ஆளாக செல்லும் அவர் கடைசி ஆளாகத் தான் வெளியே வருவார். அது தான் வித்தியாசமாகும்”
இதையும் படிங்க: பலவீனத்தில் முன்னேறி அசத்திட்டேன்.. சதத்தை விட இதான் திருப்தி.. யாருக்கும் மெசேஜ் கொடுக்கல.. ஸ்ரேயாஸ் பேட்டி
“தோனியை விட வேகமாக விக்கெட் கீப்பிங் செய்பவரை நான் பார்த்ததில்லை. அவரிடம் பந்து சென்றால் 10க்கு 9.5 தருணங்களில் நீங்கள் அவுட்டாகி விடுவீர்கள். அதை அவர் எப்படி செய்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அவருடைய கைகள் பின்னோக்கி செல்வதில்லை. விக்கெட் கீப்பிங் செய்வதில் அவர் மின்னலைப் போல் வேகமாக செயல்படுவார்” என்று பாராட்டினார்.



