
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் இரண்டரை நாட்களில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் 1 – 1* என்ற கணக்கில் சமனில் இருக்கும் இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் துவங்க உள்ளது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அந்தப் போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தியா முதல் போட்டியில் வென்ற பின் 2வது போட்டிக்கு முன் 10 நாட்கள் இடைவெளி இருந்ததாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அந்த 10 நாட்களில் முதல் போட்டியில் இந்தியா பெற்றிருந்த வேகம் மற்றும் ஃபார்ம் உடைந்ததாக கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பெர்த் மைதானத்தில் பெற்ற வெற்றியால் இந்தியாவுக்கு கிடைத்த வேகம் முதல் போட்டிக்கும் 2வது போட்டிக்கும் இடையே இருந்த 10 நாட்களில் சென்று விட்டது. தற்போது வேகம் ஆஸ்திரேலியாவிடம் இருக்கிறது. ஏனெனில் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த பின் ஆஸ்திரேலியா 3 நாட்களில் காபாவுக்கு விளையாட வருகிறார்கள்”
“எனவே வெற்றி வேகம் தெளிவாக தற்போது ஆஸ்திரேலியாவின் பக்கம் இருக்கிறது” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவிடம் உள்ள வேகத்தை பறிக்க இந்தியா இது 3 போட்டிகள் கொண்ட தொடர் என்று நினைத்துக்கொண்டு இங்கிருந்து விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இந்த தொடர் மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் 2 அணிகளுமே கம்பேக் கொடுக்கும் திறமையைக் கொண்டுள்ளார்கள். முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அப்படி தோற்கும் என்று யாரும் நினைக்கவில்லை. அதே போல இரண்டாவது போட்டியில் இந்தியா இப்படி தோற்கும் என்று யாரும் நினைக்கவில்லை. கவாஸ்கர் சார் சொன்னது போல நீண்ட இடைவெளி இந்தியாவின் வேகத்தை உடைத்துள்ளது”
இதையும் படிங்க: காபாவில் ஜெயிச்சா கோப்பை இந்தியாவுக்கே.. அதுக்கு ரோஹித் ஆஸிக்கு இந்த பஞ்ச் கொடுக்கனும்.. ரவி சாஸ்திரி
“தற்போதைய நிலையில் 3 போட்டிகள் கொண்ட தொடராக இத்தொடரை இந்தியா நினைத்து 2 வெற்றிகளைப் பெற முயற்சிக்க வேண்டும். சிட்னி, மெல்போர்னில் நமக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒருவேளை காபாவில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வென்றால் சிட்னி அல்லது மெல்போர்னில் இந்தியா கண்டிப்பாக ஒரு வெற்றியைத் பெறும். 2வது போட்டியில் ஆஸ்திரேலிய அபார கம்பேக் கொடுத்தது. இது இந்தியா கம்பேக் கொடுக்க வேண்டிய நேரம்” என்று கூறினார்.