ரசிகர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த வருண பகவான், இந்தியா – பாக் போட்டிக்கான லேட்டஸ்ட் லைவ் வெதர் ரிப்போர்ட் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வரலாற்றின் 8வது டி20 உலக கோப்பையில் முதல் சுற்று முடிந்து முக்கியமான சூப்பர் 12 சுற்றுகள் துவங்கியுள்ளன. அந்த வரிசையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் 16வது லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் எல்லைப் பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து இது போன்ற ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதுவதால் அதற்கான மவுசு உலக அளவில் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 1992 முதல் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் புதிய வரலாறு படைத்தது.

அத்தோடு நிற்காமல் அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்த பாகிஸ்தான் நடப்புச் சாம்பியன் இந்தியாவை பைனலுக்கு செல்ல விடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அப்படி கடைசி 3 சந்திப்பில் 2 வெற்றிகளை பெற்று கெத்தாக நடந்து வரும் அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஷாஹீன் அஃப்ரிடி காயத்திலிருந்து குணமடைந்து திரும்பி மேலும் பலத்தை சேர்க்கிறார். அதனால் துபாய் போலவே இம்முறையும் இந்தியாவை ஆஸ்திரேலிய மண்ணணில் மண்ணைக் கவ்வ வைக்க பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தயாராகியுள்ளது.

- Advertisement -

செவிசாய்த்த வருணபகவான்:
மறுபுறம் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் சமீபத்திய ஆசிய கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்று வெளியேறிய இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியது மேலும் பின்னடைவை கொடுக்கிறது. இருப்பினும் பாகிஸ்தானை விட டாப் ஆர்டர் முதல் மிடில் ஆர்டர் வரை தரமான வீரர்களை கொண்டுள்ள இந்தியாவுக்கு சுழல் பந்து வீச்சு ஏற்கனவே பலத்தை சேர்கிறது. மேலும் பும்ராவுக்கு பதிலாக நான் இருக்கிறேன் என்ற வகையில் பயிற்சிப் போட்டியில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்து முகமது சமி இணைந்துள்ளார்.

எனவே சமீபத்தில் கொடுத்த அடுத்தடுத்த வரலாற்று தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து பரம எதிரியான பாகிஸ்தானை பழி தீர்க்க இந்தியாவும் தயாராகியுள்ளது. ஆனால் இப்போட்டி நடைபெறுமா என்று ரசிகர்கள் கவலையடையும் அளவுக்கு மெல்போர்ன் நகரில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் 23ஆம் தேதியன்று 80 – 90% மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்ததால் ரசிகர்கள் கவலையடைந்தனர். இருப்பினும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வானிலை அடிக்கடி மாறக்கூடியது என்பதால் ஒரு வருடமாக காத்திருக்கும் இப்போட்டி எப்படியாவது நடைபெற வேண்டுமென இருநாட்டு ரசிகர்களும் கடவுளை பிரார்த்தித்து வருகிறார்கள்.

- Advertisement -

அதற்கு வருண பகவான் செவி சாய்த்தது போல் தற்போது மெல்போர்ன் நகரில் நிலவும் வானிலை போட்டிக்கு சாதகமாக முன்னேறி வருகிறது. ஆம் ஏற்கனவே வெளியான வானிலை அறிக்கையின்படி 80 – 90% என்ற அளவில் எதிர்பார்க்கப்பட்ட மழைக்கான வாய்ப்பு தற்போது வெறும் 25 – 30% என்ற அளவில் மேஜிக் போல குறைந்துள்ளது. குறிப்பாக உள்ளூர் நேரப்படி போட்டி நடைபெறும் 7 மணி முதல் 11 மணி வரை 33%, 37%, 39%, 40%, 50% என்ற அளவில் உள்ளது. இது அடுத்த 18 மணி நேரத்தில் போட்டி நடைபெறுவதற்கு சாதகமாகும் வகையில் மேலும் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு சாட்சியாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் மெல்போர்ன் மைதானத்திற்கு வெளியே மழை இல்லாததால் இந்திய வீரர்கள் ஈடுபட்ட வலைப்பயிற்சி வீடியோக்கள் சமூக வலைதளங்கள் வைரலாகின. அதை விட தற்போது மெல்போர்ன் மைதானத்துக்குள் நுழைந்து இந்திய வீரர்கள் பயிற்சிகளை துவங்கும் அளவுக்கு வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே உள்ளது. இதை நேரடியாக அங்கிருக்கும் கிரிக்கெட் வல்லுனர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.

இதனால் ஒரு கட்டத்தில் நடைபெறுமா என்று எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டி தற்போது நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது. ஏனெனில் மழைக்கான வாய்ப்பு வெறும் 25% என்றளவில் இருப்பதால் மழை வந்தாலும் கூட பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்பலாம். அதனால் அதற்கேற்றார் போல் ஓவர்கள் குறைக்கப்பட்டு இப்போட்டியின் முடிவு கிடைக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கும் இந்திய ரசிகர்கள் அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

Advertisement