IND vs ENG : இந்தியாவின் வெற்றியை காலி செய்த ஒற்றை கேட்ச், எப்போதான் திருந்துவாங்க இந்திய பீல்டர்கள்

Jonny Bairstow Hanuma Vihari Drop Catch
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பரிதாப தோல்வியடைந்தது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காமில் துவங்கியது. அதில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா போராடி 416 ரன்கள் எடுத்தது. விராட் கோலி, புஜாரா, விஹாரி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 98/5 என தடுமாறிய இந்தியாவுக்கு மாஸ் கம்பேக் கொடுக்கும் வகையில் அட்டகாசமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் சதமடித்து 146 ரன்களும் நிதானமாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா சதமடித்த 104 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து துல்லியமான இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 284 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இந்தியாவின் சொதப்பல்:
அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா போட்டியில் வலுவான நிலையில் இருந்தது. ஆனால் 2-வது இன்னிங்சில் அஜாக்கிரதையாக விளையாடிய விராட் கோலி, விஹாரி, கில், ஷ்ரேயஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இந்தியா வெறும் 245 ரன்களுக்கு சுருண்டது. 2-வது இன்னிங்சில் அதிகபட்சமாக பொறுப்பைக் காட்டிய புஜாரா 66 ரன்களும் நிதானத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 57 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இறுதியில் 378 என்று கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து தொடக்க வீரர்களின் அதிரடியால் 107/0 என்ற சூப்பரான தொடக்கத்தைப் பெற்று ஆரம்பத்திலேயே மிரட்டியது. அப்போது லீஸ் 56, கிராவ்லி 46, போப் 0 என 3 இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து அவுட் செய்த இந்தியா பதிலடி கொடுத்தது. ஆனாலும் நல்ல பார்மில் இருக்கும் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ அடுத்ததாக களமிறங்கி நங்கூரமாக பேட்டிங் செய்து கடைசி வரை அவுட்டாகாமல் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தனர்.

- Advertisement -

பறிபோன கனவு:
அதில் ரூட் 142* பேர்ஸ்டோ 114* என இருவருமே சதமடித்து அற்புதமான பினிஷிங் கொடுத்ததால் 378/3 ரன்களை எடுத்த இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேஸிங் செய்து மிரட்டலான வெற்றி பெற்றது. அதனால் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்த அந்த அணி சொந்த மண்ணில் எங்களை வீழ்த்துவது கடினம் என்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா கடைசி நேரத்தில் விலகியதால் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் முதல் 3 நாட்களில் அசத்திய இந்தியா கடைசி 2 நாட்களில் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சொதப்பி வெற்றியை கோட்டை விட்டது.

அதைவிட 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் 15 வருடங்கள் கழித்து டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பையும் இந்தியா நழுவ விட்டது. இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்தியாவின் மோசமான பேட்டிங் பவுலிங் தோல்விக்கு முக்கிய பங்காற்றுகிறது. அதைவிட ஹனுமா விஹாரி விட்ட ஒற்றைக் கேட்ச் இந்தியாவின் வெற்றியை சுக்கு நூறாக உடைத்தது ரசிகர்களின் மனதை மேலும் உடைக்கிறது.

எப்போதான் திருந்துவாங்க:
ஆம் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் மிரட்டலாக பேட்டிங் செய்து முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 106 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அப்படிப்பட்ட அவர் 4-வது நாளில் 2-வது இன்னிங்சில் வெறும் 18 ரன்கள் எடுத்திருந்த போது முகமது சிராஜ் வீசிய 38-வது ஓவரில் எட்ஜ் வாங்கி கேட்ச் கொடுத்தார். ஆனால் 4-வது சிலிப் பகுதியில் நின்று கொண்டிருந்த தம்மிடம் அழகாக வந்த அந்த பந்தை ஹனுமா விஹாரி பிடிக்க தவறினார்.

அதை பயன்படுத்திய பேர்ஸ்டோ மேற்கொண்டு 96 ரன்களை குவித்து இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தார். இப்போட்டியில் 2 இன்னிங்சிலும் பேட்டிங்கில் சொதப்பிய விகாரி கேட்ச்சை கூட சரியாகப் பிடித்து வெற்றிக்கு பங்காற்றவில்லை என்று அவர் மீது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காட்டத்துடன் காணப்படுகின்றனர். சமீபத்திய தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் உட்பட சமீப காலங்களில் இது போன்ற முக்கிய தருணங்களில் இந்திய ஃபீல்டர்கள் விடும் கேட்ச்கள் இந்தியாவுக்கு மாபெரும் தோல்விகளை பரிசளித்து வருகிறது. அதனால் இந்த ஃபீல்டர்கள் எப்போது தான் திருந்துவார்கள், ஃபீல்டிங் பயிற்சியாளர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று இந்திய ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement