இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மே 16-ஆம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே கே.கே.ஆர் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
ரன்களை வாரி வழங்கிய குஜராத் டைட்டன்ஸ் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக பின் ஆலன் 93 ரன்களையும், அன்க்ரிஷ் ரகுவரன்ஷி 82 ரன்களையும் குவித்தனர். அவர்கள் இருவரையும் தவிர்த்து கேமரூன் கிரீன் 52 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
பின்னர் 248 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது குஜராத் அணியானது விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே எட்டு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்புடன் இந்த போட்டியில் விளையாடி வருகிறது.
இவ்வேளையில் இந்த போட்டியின் போது முதல் பாதியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 247 ரன்களை விட்டுக் கொடுத்ததன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் மோசமான சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளது. அதாவது கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரில் அறிமுகமாகி விளையாடி வரும் குஜராத் அணியானது இதற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 243 ரன்களை வழங்கியிருந்தது.
இதையும் படிங்க : ஐ.பி.எல் கோப்பையை வென்றபோது முழங்காலில் அமர்ந்து கண்ணீர் விட்டது ஏன்? – விராட் கோலி நெகிழ்ச்சி
அதுவே ஐ.பி.எல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி விட்டுக் கொடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. இவ்வேளையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 247 ரன்களை விட்டு கொடுத்ததன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ரன்களை குஜராத் அணி விட்டுக்கொடுத்த போட்டியாக இந்த போட்டி மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



