இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது நேற்று முன்தினம் அபுதாபியில் கோலாகமாக நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்தில் கலந்துகொண்ட 10 அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து மேலும் தங்களது அணியை பலப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற இருக்கும் இந்த தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
குஜராத் அணியின் கேப்டனாக இவரே இருப்பார் : நிர்வாக இயக்குனர் தகவல்
அந்த வகையில் அடுத்த 2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் யார்? என்பது குறித்த உறுதியான தகவலை தற்போது குஜராத் அணியின் நிர்வாக இயக்குனர் ஜினால் மேஹ்தா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் தற்போது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக தடுமாறி வருகிறார்.
அதனால் இந்திய டி20 அணியில் அவரது இடம் அதிகளவு விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அவர் கேப்டனாக தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் அவரே அடுத்த ஆண்டு குஜராத் அணியின் கேப்டன் என அந்த அணியின் இயக்குனர் ஜினால் மேஹ்தா உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில்லின் பேட்டிங் திறன் மற்றும் கேப்டன்சி ஆகியவற்றை முன்கூட்டியே நாங்கள் தான் கண்டறிந்தோம் என்று நினைக்கிறேன். அதனால் தான் அவர் குஜராத் அணியின் கேப்டன் ஆனார். அதன்பிறகு அவர் தற்போது இந்திய அணிக்கும் கேப்டனாகி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
எங்களுடைய அணிக்கும் சுப்மன் கில்க்கும் இடையேயான பிணைப்பு கடந்த சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. மினி ஏலத்தின் போதும் அவருடைய ஆலோசனைகளின் படியே வீரர்களை தேர்ந்தெடுத்தோம். எனவே அடுத்த ஆண்டு மட்டுமல்ல இனி வரப்போகும் பல ஆண்டுகளுக்கு சுப்மன் கில் தான் எங்களது அணியின் கேப்டன் என ஜினால் மேஹ்தா உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க : 5 ஆவது டி20 போட்டிக்கு முன்னதாக சூரியகுமார் யாதவின் கேப்டன்சியை பாராட்டிய – இர்பான் பதான்
அதேபோன்று அகமதாபாத் மைதானத்தில் விளையாடுவது எங்களுடைய அதிர்ஷ்டம் என்றும் உலகின் மிகப்பெரிய மைதானம் எங்களுடைய சொந்த மைதானமாக இருப்பதில் மகிழ்ச்சி என்றும் கூறினார். மேலும் இங்கு குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடும் போட்டிகளை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருவதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.



