உலககோப்பை ஜெயிச்ச மாதிரி – வெற்றியை ஊர்வலமாக கொண்டாடிய குஜராத், முக்கிய இடத்திலிருந்து பாராட்டு

Gujarat Titans Road Show Hardik Pandya
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வருடத்திலேயே வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் 10 அணிகள் பங்கேற்றதால் இம்முறை 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடர் கடந்த 65 நாட்களாக பல எதிர்பாராத த்ரில்லர் திருப்பங்கள் நிறைந்த போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வந்தது. இந்த தொடரில் 5000+ கோடிக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட செலவில் சிவிசி குரூப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை 15 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கி கொஞ்சம் கூட கேப்டன்ஷிப் முன் அனுபவம் இல்லாத போதிலும் நம்பி தங்களது முதல் கேப்டனாக நியமித்தது.

அதனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத அவர் தலைமையில் இந்த அணி எங்கே வெல்லப் போகிறது என்று பெரும்பாலானவர்கள் ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் மும்பை, சென்னை போன்ற வெற்றிகரமான அணிகள் கூட ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் பாண்டியா தலைமையில் எதிரணிகளை சொல்லி அடித்த குஜராத் ஆரம்பம் முதலே வெற்றி நடைபோட்டு லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

வலுவான குஜராத்:
இதற்கு முன் மிடில் ஆர்டரில் விளையாடிய ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றதும் 3-வது இடத்தில் களமிறங்கி சரியும் போதெல்லாம் பேட்டிங்கை தாங்கிப் பிடித்தார். அவருடன் சுப்மன் கில், சஹா ஆகியோர் பலம் சேர்க்க கடைசி நேரத்தில் டேவிட் மில்லர், ராகுல் திவாதியா ஆகியோரும் எதிர்பாராத மிரட்டல் பினிஷிங் கொடுத்து வெற்றியைத் தேடி கொடுப்பவர்களாக இருந்தனர். அதேபோல் பந்துவீச்சில் ரஷீத் கான், முகமது சமி ஆகியோருடன் இளம் வீரர்கள் யாஷ் தயால், சாய் கிஷோர் ஆகியோர் பெரும் பலத்தை சேர்த்ததால் எளிதாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த அணி நாக்-அவுட் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியிலும் எந்த தடுமாற்றமும் இல்லாமல் ராஜஸ்தானை தோற்கடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றது.

அதை தொடர்ந்து அஹமதாபாத்  நகரில் மே 29இல் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் மீண்டும் ராஜஸ்தானை எதிர்கொண்ட அந்த அணி ஆரம்பத்திலேயே அற்புதமாக பந்துவீசி வெறும் 130/9 ரன்களுக்கு மடக்கி பிடித்தது. அதை 18.1 ஓவரிலேயே சுப்மன் கில் 45* (42) டேவிட் மில்லர் 32* (19) ஆகியோர் வெற்றிகரமாக சேஸிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தனர். அதனால் தனது முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் மைதானத்தில் 1 லட்சம் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை முத்தமிட்டு வரலாறு படைத்தது. அந்த வெற்றிக்கு 34 ரன்கள் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

வெற்றி ஊர்வலம்:
அதை தொடர்ந்து பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் வெற்றி கோப்பையை வாங்கிய ஹர்திக் பாண்டியா அதை முத்தமிட்டு தனது அணி வீரர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதிகாலை 3 மணி வரை அஹமதாபாத் மைதானத்தில் வெற்றியைக் கொண்டாடிய குஜராத் வீரர்களுடன் அவர்களின் குடும்பங்களும் இணைந்து கொண்டாடி காலை 6 மணிக்கு பின்புதான் ஹோட்டல் சென்றனர்.

அதை தொடர்ந்து நேற்று மே 30-ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் குஜராத்தில் உள்ள உஸ்மான்புறா ஆற்று சாலை முதல் விஸ்வாகுஞ் ஆற்று சாலை வரை ஐபிஎல் 2022 வெற்றிக் கோப்பையுடன் ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் போன்ற முக்கிய வீரர்கள் அடங்கிய குஜராத் அணியினர் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக வந்து குஜராத் மக்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

மேலும் இந்த மாபெரும் வெற்றியை முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் சாத்தியமாக்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை அம்மாநில முதலமைச்சர் ஸ்ரீ பூபேந்திர பாட்டில் நேரில் வரவழைத்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதையும் படிங்க : பேட்டிங்கில் அரைசதம் அடிச்சதெல்லாம் சரிதான். ஆனா அஷ்வினின் இந்த சொதப்பல் ஆபத்தானது – விவரம் இதோ

உலககோப்பை மாதிரி:
இதற்கு முன் 5 மற்றும் 4 கோப்பைகளை வென்ற மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் கூட ஐபிஎல் கோப்பையை வென்றபோது இதுபோல சாலை ஊர்வலம் செய்தது கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் உலக கோப்பையை வென்றதைப் போல குஜராத் அணி நிர்வாகம் இந்த வெற்றியை கொண்டாடியது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

Advertisement