ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி ஜெய்ப்பூரில் 47வது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஜோடி சேர்ந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
அந்த வகையில் 11 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடி 93 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத்துக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தது. அதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 39 (30) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் தமது பங்கிற்கு அதிரடியாக விளையாடினார்.
குஜராத் அசத்தல்:
மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் கில் அரை சதத்தை அடித்து அசத்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 84 (50) ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 13 (8) ரன்னில் சந்தீப் சர்மா வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இந்தப் பக்கம் தொடர்ந்து அடித்து நொறுக்கிய ஜோஸ் பட்லர் அரை சதத்தை அடித்தார். எதிர்ப்புறம் வந்த ராகுல் திவாட்டியா 9 (4) ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் விக்கெட்டை இழந்தாலும் தமிழக வீரர் சாருக்கான் 5* (2) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். இறுதியில் பட்லர் 50* (26) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 209/4 ரன்களை குவித்து அசத்தியது.
சுதர்சன் சாதனை:
மீண்டும் தடுமாற்றமாகவே பவுலிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக மஹீஸ் தீக்சனா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்தப் போட்டியையும் சேர்த்து தமிழக வீரர் சாய் சுதர்சன் 9 போட்டிகளில் மொத்தம் 456* ரன்கள் அடித்துள்ளார். அதனால் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி, சூரியகுமாரை முந்தியுள்ள அவர் ஆரஞ்சு தொப்பியை மீண்டும் தன் வசமாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: கப் ஜெயிக்கலனா என்ன? 18 ஆண்டு ஐ.பி.எல் வரலாற்றில் முதல் அணியாக ஆர்.சி.பி – நிகழ்த்திய சாதனை
நேற்று மதியம் நடைபெற்ற போட்டியில் சூரியகுமார் 427 ரன்கள் அடித்து பெற்ற ஆரஞ்சு தொப்பியை இரவு நடந்த போட்டியில் 443 ரன்களை குவித்து விராட் கோலி தன் வசமாக்கினார். தற்போது அந்த மகுடத்தை ஒருநாள் கூட விராட் கோலி தலையில் விடாத சாய் சுதர்சன் மீண்டும் தனதாக்கியுள்ளார். அந்த வகையில் ஒரு தமிழக வீரர் ஜாம்பவான்களை முந்தி அசத்துவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.



