இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை சாம்பியன் பட்டம் இல்லாத அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இருந்து வந்தாலும் இன்றளவும் அந்த அணியின் ரசிகர்கள் அவர்களின் மீது வைத்திருக்கும் ஆதரவு என்பது சற்றும் குறைந்ததில்லை. உதாரணமாக ஐந்து கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை விட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு உண்மையான ரசிகர்கள் உண்டு என்றால் மிகையல்ல.
ஆர்.சி.பி அணி நிகழ்த்திய வரலாற்று சாதனை :
அந்த அளவிற்கு பெங்களூரு அணி ரசிகர்கள் அந்த அணியை ஆதரித்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இதுவரை தாங்கள் விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றுள்ளது.
அதன்காரணமாக 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தினையும் பிடித்துள்ளது. கடைசியாக டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இருந்தது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 165 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் ஆர்.சி.பி அணியானது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் இதுவரை சொந்த மண்ணில் நான்கு போட்டியில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றிருந்தாலும் இந்த ஆண்டு அவர்கள் வெளி மைதானத்தில் விளையாடிய 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியினை பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க : கேஎல் ராகுலை திட்டிய நாளில் லக்னோ ஓனர் சொன்னது என்ன? இப்படி செஞ்சா யார் தான் பாராட்டுவா? அமித் மிஸ்ரா
இதன் மூலம் தொடர்ந்து ஆறு அவே போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே அணியாக ஆர்.சி.பி அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. பெங்களூரு அணி தங்களது அடுத்த போட்டியில் மே 3-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.



