ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தடுமாற்றமாக விளையாடிய மயங் அகர்வால் 16 (17) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதே போல மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த டிராவிஸ் ஹெட் 19 (14) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த அபிஷேக் ஷர்மா 29 (20), ஐடன் மார்க்கம் 17 (19), ஹென்றிச் க்ளாஸென் 24 (13) ரன்களில் அவுட்டாகி சென்றனர். கடைசியில் சபாஷ் அகமது 22 (20), அப்துல் சமத் 29 (14) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ஹைதராபாத் 162/ 8 ரன்கள் மட்டுமே போராடி எடுத்தது.
குஜராத் வெற்றி:
மறுபுறம் கடந்த போட்டியில் 277 ரன்கள் அடித்த ஹைதராபாத்தை இம்முறை அபாரமாக பந்து வீசி அடக்கிய குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 3 விக்கெட்டுகள் எடுத்தார். குறிப்பாக 18வது ஓவரில் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 20வது ஓவரில் அதை விட அட்டகாசமாக செயல்பட்டு வெறும் 2 ரன்கள் கொடுத்து ஹைதராபாத் 180 ரன்கள் கூட அடிக்க முடியாமல் ஆட்டத்தை குஜராத் பக்கம் கொண்டு வந்தார்.
அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ரிதிமான் சஹா அதிரடியாக 25 (13) ரன்கள் குவித்து அவுட்டானார். அப்போது இம்பேக்ட் வீரராக வந்த தமிழக வீரர் சாய் கிஷோர் நிதானமாக விளையாடினார். அவருடன் சேர்ந்து மறுபுறம் நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் கேப்டன் சுப்மன் கில் 36 (28) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே போலவே மிடில் ஓவர்கள் முழுவதும் பொறுமையாக விளையாடிய சாய் சுதர்சன் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 45 (36) ரன்கள் அடித்து 17வது ஓவரில் கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் டேவிட் மில்லர் அதிரடியாக 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44* (27) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிசிங் கொடுத்தார். அவருடன் விஜய் சங்கர் 14* (11) ரன்கள் எடுத்ததால் 19.1 ஓவரிலேயே 168/3 ரன்கள் எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அதனால் கடந்த போட்டியில் சென்னையிடம் சந்தித்த தோல்வியில் இருந்து மீண்ட குஜராத் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இதையும் படிங்க: 531 ரன்ஸ்.. வங்கதேசத்தை பந்தாடிய இலங்கை.. இந்தியாவின் 48 வருட சாதனையை உடைத்து புதிய உலக சாதனை
மறுபுறம் பேட்டிங்கில் தேவையான ரன்கள் எடுக்க தவறிய ஹைதராபாத்துக்கு பந்துவீச்சில் கேப்டன் கம்மின்ஸ், மயங் மார்க்கண்டே சபாஷ் அகமது தலா 1 விக்கெட் எடுத்து தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதனால் பட் கமின்ஸ் தலைமையில் 3 போட்டிகளில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்து ஹைதராபாத் பின்னடைவை சந்திக்கிறது.



