531 ரன்ஸ்.. வங்கதேசத்தை பந்தாடிய இலங்கை.. இந்தியாவின் 48 வருட சாதனையை உடைத்து புதிய உலக சாதனை

BAN vs SL 22
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற இலங்கை ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி மார்ச் 30ஆம் தேதி சட்டோகிராாம் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு ஆரம்பத்திலேயே 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மதுசங்கா 57 ரன்கள் எடுத்து அவுட்டானார். அந்த நிலையில் வந்த குசால் மெண்டிஸ் நிதானமாக விளையாடினார். அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட மற்றொரு துவக்க வீரர் கருணரத்னே 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

புதிய உலக சாதனை:
அப்போது வந்த அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன்களில் அவுட்டான நிலையில் எதிர்ப்புறம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸ் 93 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அவருடன் சேர்ந்து விளையாடிய தினேஷ் சந்திமல் தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதை தொடர்ந்து லோயர் மிடில் ஆர்டரில் வங்கதேச பவுலர்களை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அசத்திய கேப்டன் டீ சில்வா அரை சதமடித்து 70 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல கமிண்டு மெண்டிஸ் தனது பங்கிற்கு அபாரமாக விளையாடி 92* ரன்கள் குவித்து சதத்தை நெருங்கினார். ஆனால் எதிர்ப்புறம் பிரபத் ஜெயசூர்யா 28, விஸ்வா பெர்னாண்டோ 11, லகிரு குமாரா, அஷிதா பெர்னாண்டோ 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அதனால் கமிண்டு மெண்டிஸ் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும் இலங்கை தங்களுடைய முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்து மிரட்டியது. ஆனால் அதில் ஆச்சரியப்படும் வகையில் ஒரு பேட்ஸ்மேன் கூட சதமடிக்காமலேயே இலங்கை 531 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்சில் சதம் அடிக்காமலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் 48 வருட சாதனையை உடைத்துள்ள இலங்கை புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: சிஎஸ்கே’வை சாய்க்க வெறியுடன் காத்திருக்கும் இந்திய வீரரை இறக்கும் டெல்லி? ரிக்கி பாண்டிங் சூசகம்

இதற்கு முன் கடந்த 1976ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக கான்பூர் நகரில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்சில் எந்த பேட்ஸ்மேனும் சதமடிக்காமலேயே இந்தியா 524/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ததே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு சுமாராக பந்து வீசிய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் வங்கதேசம் இரண்டாவது நாள் முடிவில் 55/1 ரன்கள் எடுத்துள்ளது. ஹசன் ஜாய் 21 ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு களத்தில் 28*, ஜாகிர் ஹசன் டைஜூல் இஸ்லாம் 0* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement