58 ரன்ஸ்.. என்னையா கழற்றி விட்டிங்க? சிராஜ் பவர்பிளே சாதனை.. குஜராத் 2வது பெரிய வெற்றி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அகமதாபாத் நகரில் 23வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்று குஜராத்துக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் 20 ஓவரில் சிறப்பாக விளையாடி 217-6 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 82 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அவருடன் ஜோஸ் பட்லர் 36, ஷாருக்கான் 36, ராகுல் திவாட்டியா 24* ரன்கள் எடுத்து கை கொடுத்தனர். ராஜஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 2, தீக்சனா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் 6, நிதிஷ் ராணா 1, துருவ் ஜுரேல் 5 ரன்னில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

குஜராத் வெற்றி:

அதே போல மறுபுறம் அதிரடியாக விளையாடி போராடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 41 (28), ரியான் பராக் 26 (14) ரன்களில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் ஹெட்மயர் அதிரடியாக விளையாடி அரை சத்தத்தை அடித்து 52 (32) ரன்கள் எடுத்து போராடினார். ஆனால் அவரை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் கை கொடுக்கத் தவறியதால் 19.2 ஓவரில் ராஜஸ்தான் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் தங்களுடைய 4வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அத்துடன் ஐபிஎல் தொடரில் தங்களுடைய 2வது பெரிய வெற்றியைப் பதிவு செய்து குஜராத் சாதனை படைத்தது. இதற்கு முன் 2023 தொடரில் லக்னோவுக்கு எதிராக இதே அகமதாபாத் மைதானத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனை.

- Advertisement -

சிராஜ் பதிலடி:

இந்த வெற்றிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் கிஷோர் 2 ரஷித் கான் 2, பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். அதே போல நட்சத்திர வீரர் முகமது சிராஜ் 4 ஓவரில் வெறும் 30 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்து சிறப்பாக பவுலிங் செய்தார். இந்தப் போட்டியையும் சேர்த்து 2025 தொடரில் பவர் பிளே ஓவர்களில் மட்டும் சிராஜ் 7 விக்கெட் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ரிட்டையர்ட் அவுட் எதுக்கு? திவாட்டியா 5 சிக்ஸ் பறக்க விட்டதை மறந்துட்டிங்களே.. எம்ஐ, சென்னையை சாடிய கைப்

அதன் வாயிலாக 2025 ஐபிஎல் தொடரில் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ராஜஸ்தானின் சந்தீப் சர்மா 6 விக்கெட்டுகள் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். அந்த வகையில் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்லி தம்மைக் கழற்றி விட்ட இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆர்சிபி அணிக்கு சிராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement