இரவு 12.30.. 7க்கு 7க்கு பரிதாப சாதனை தோல்வி.. மழையுடன் குஜராத்திடம் வெற்றியை மும்பை விட்டது எப்படி?

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஆறாம் தேதி மும்பையில் 56வது போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை 20 ஓவரில் போராடி 155/8 ரன்கள் அடித்தது. அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 35, சூரியகுமார் யாதவ் 53, கோர்பின் போஸ்க் 27 ரன்கள் எடுத்தனர்.

குஜராத்துக்கு அதிகபட்சமாக தமிழகத்தின் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்த விளையாடிய குஜராத் அணிக்கு தமிழகத்தின் சாய் சுதர்சன் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் கேப்டன் கில் நிதானமாக விளையாடினார். அவருடன் சேர்ந்து மறுபுறம் நிதானத்தைக் காட்டிய ஜோஸ் பட்லர் 30 (27) ரன்கள் எடுத்த போது அஸ்வனி குமார் வேகத்தில் நடையைக் கட்டினார்.

- Advertisement -

குறுக்கே மழை:

அடுத்த சில ஓவரில் மறுபுறம் போராடிய கில்லை 43 (46) ரன்னில் பும்ரா போல்ட்டாக்கினார். மிடில் ஆர்டரில் அடித்து நொறுக்க முயற்சித்த ரூத்தர்ஃபோர்ட் 28 (15) ரன்னில் போல்ட் வேகத்தில் விக்கட்டை இழந்தார். அடுத்ததாக வந்த சாருக்கான் 6, ரசீத் கான் 2 ரன்களில் போராடி அவுட்டானார்கள்.

இறுதியில் வெற்றியை நெருங்கிய குஜராத் 18 ஓவரில் 132/6 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்தது. தொடர்ந்து பெய்த மழை இரவு 12.30 மணிக்கு ஓய்ந்ததால் போட்டி மீண்டும் தொடர்ந்தது. அப்போது 19 ஓவராக குறைக்கப்பட்ட போட்டியில் குஜராத்துக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. தீபக் சஹர் வீசிய அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் ராகுல் திவாட்டியா 4, 1 ரன்கள் எடுக்க அடுத்த பந்தில் ஜெரால்ட் கோட்சி சிக்ஸர் அடித்து அதற்கடுத்த நோ பால் பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

- Advertisement -

குஜராத் வெற்றி:

4வது பந்தில் திவாட்டியா சிங்கிள் எடுத்த நிலையில் 5வது பந்தில் 12 (6) ரன்களில் அவுட்டானதால் கடைசி பந்தில் குஜராத்துக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போது வந்த அர்சத் கான் அதை மிட் ஆஃப் திசையில் அடித்தார். அதை எடுத்த பாண்டியா ஸ்டம்ப் பக்கத்தில் பிடித்து அடிக்க பவுலர் தீபக் சஹார் இல்லாததால் சற்று யோசித்தார். இருப்பினும் வெற்றி பறிபோய் விடும் என்பதால் அவர் பந்தை எறிந்தார்.

இதையும் படிங்க: 97/2 டூ 155/8.. குஜராத்திடம் தடுமாறிய மும்பைக்காக.. 3 முறை 500 விளாசிய சூரியகுமார்.. சச்சினை முந்தி சாதனை

ஆனால் குறித் தவறிய அந்தப் பந்தை மற்றொரு பக்கத்தில் இருந்த சூர்யகுமாரும் பிடித்து அடிக்கவில்லை. மறுபுறம் அர்ஷத் கான் சிங்கிள் எடுத்ததால் 19 ஓவரில் 147/7 ரன்களை எடுத்த குஜராத் 3 விக்கெட் வித்தியாசத்தில் 8வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. மறுபுறம் ஐபிஎல் வரலாற்றில் கடைசி பந்தில் அதிக முறை இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் தோற்ற அணி என்ற பரிதாப சாதனையை கொல்கத்தாவுடன் (தலா 7) மும்பை பகிர்ந்து கொண்டது. அந்த அணிக்கு பும்ரா, போல்ட், அஸ்வனி குமார் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement