GT vs MI : பெட்டி பாம்பாக அடங்கி மோசமாக தோற்றும் சென்னைக்கு கைகொடுத்த மும்பை – குஜராத் மிரட்டல் வெற்றி

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற 35வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு ஆரம்பத்திலேயே அர்ஜுன் டெண்டுல்கர் வேகத்தில் ரித்திமான் சஹா 4 (7) ரன்களை ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தடுமாற்றமாக செயல்பட்டு 13 (14) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட சுப்மன் கில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 56 (34) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் 19 (16) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்ததால் 101/4 என தடுமாறிய குஜராத்தை அடுத்ததாக ஜோடி சேர்ந்த அபினவ் மனோகர் டேவிட் – மில்லர் ஆகியோர் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்து மீட்டெடுத்தனர். குறிப்பாக டெத் ஓவர்களில் மும்பை பவுலர்களை பிரித்து மேய்ந்த இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக செயல்பட்ட போது அபினவ் மனோகர் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (21) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அடங்கிய மும்பை:
அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 46 (22) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர்களுடன் கடைசி நேரத்தில் களமிறங்கி 3 சிக்சர்களை தெறிக்க விட்ட ராகுல் திவாடியா 20* (5) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் குஜராத் 207/6 ரன்கள் விளாசி தங்களுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரையும் பதிவு செய்து சாதனை படைத்தது. சுமாராக பந்து வீசிய மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 2 விக்கெட் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 208 என்ற கடினமான இலக்கை துரத்திய மும்பைக்கு ஹர்திக் பாண்டியா வீசிய 2வது ஓவரில் குருட்டுத்தனமான ஷாட் அடித்து ரோகித் சர்மா 2 (8) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடவிய இசான் கிசான் 13 (21) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை காப்பாற்றுவார்கள் என்று கருதப்பட்ட திலக் வர்மா 2 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுக்க மறுபுறம் சற்று நம்பிக்கை கொடுத்த கேமரூன் கிரீனும் 3 சிக்சருடன் 33 (26) ரன்களில் நூர் அஹமத் சுழலில் ஆட்டமிழந்து சென்றார்.

- Advertisement -

அப்போது வந்த அதிரடி நாயகன் டிம் டேவிட்டை அதே ஓவரிலேயே டக் அவுட்டாக்கிய நூர் அகமது அடுத்து களமிறங்கி அச்சுறுத்தலை கொடுத்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவையும் தன்னுடைய அடுத்த ஓவரில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (12) ரன்களில் காலி செய்தார். அதனால் 90/6 என ஆரம்பத்திலேயே மொத்தமாக சரிந்த மும்பைக்கு கடைசி நேரத்தில் இளம் வீரர் நேஹல் வதேரா 3 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 40 (21) ரன்களும் பியூஸ் சாவ்லா 13 (9) ரன்களும் அர்ஜுன் டெண்டுல்கர் 13 (9) ரன்களும் எடுத்து போராடி ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவரில் 152/9 ரன்களுக்கு மும்பையை கட்டுப்படுத்தி 55 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்ற குஜராத் சார்பில் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளையும் ரசித் கான் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். முன்னதாக வரலாற்றில் 200 ரன்களை கொடுத்த போட்டிகளில் ஒரு முறை மட்டுமே வெற்றி கண்ட மும்பை 8 போட்டிகளில் தோற்றத்தைப் போல இன்றைய போட்டியிலும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கி 9வது முறையாக தோற்றது.

- Advertisement -

குறிப்பாக பேட்டிங்கில் ரோகித் சர்மா, இசான் கிசான், சூரியகுமார் யாதவ் என வெறித்தனமாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் இருந்தும் குஜராத்தின் நேர்த்தியான பந்து வீச்சில் பொறுப்பின்றி போராடாமல் அவுட்டாகி பெரிய தோல்வியை கொடுத்தனர்.

இதையும் படிங்க: PAK vs NZ : 150 கி.மீ பாக் பவுலர்களை தெறிக்க விட்ட மார்க் சேப்மேன் – 2 தனித்துவ உலக சாதனையுடன் படைத்த 4 சாதனைகள் இதோ

இருப்பினும் 140 ரன்களுக்குள் மும்பையை கட்டுப்படுத்தினால் ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் சென்னையை முந்தி முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு குஜராத்துக்கு ஏற்பட்டது. ஆனால் மோசமாக தோற்றும் 152/9 ரன்கள் எடுத்த மும்பை அதை தடுத்து சென்னைக்கு கை கொடுக்கும் வகையில் செயல்பட்டதால் ரன் ரேட் அடிப்படையில் தற்போது குஜராத் 2வது இடத்தில் மட்டுமே உள்ளது.

Advertisement