
ஐபிஎல் 2022 தொடரில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற 57-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள இவ்விரு அணிகள் மோதிய இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் குஜராத் அணிக்கு முதல் முறையாக தமிழக இளம் வீரர் சாய் கிஷோர் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் ரித்திமான் சாஹா 5 (11) ரன்களில் அவுட்டாக அடுத்த ஒருசில ஓவர்களில் மேத்யூ வேட் 10 (7) ரன்களில் நடையை கட்டினார்.
அதனால் 24/2 என தடுமாறி அந்த அணிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 11 (13) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அந்த இக்கட்டான நிலையில் மறுபுறம் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டிய சுப்மன் கில் அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லருடன் 4-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை மீட்டெடுக்க முயற்சித்தார்.
குஜராத் சுமார்:
ஆனால் 26 (24) ரன்கள் எடுத்திருந்தபோது டேவிட் மில்லர் அவுட்டானதால் மீண்டும் அந்த அணி பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் கடைசி வரை நின்று அவுட்டாகாமல் 7 பவுண்டரி உட்பட அரைசதம் கடந்த சுப்மன் கில் 63* (49) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் 4 பவுண்டரிகளை பறக்கவிட்ட ராகுல் திவாடியா 22* (16) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார்.
ஆனாலும் 20 ஓவர்களில் 144/4 என்ற சுமாரான ரன்களை மட்டுமே குஜராத் எடுத்தது. லக்னோ சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 145 என்ற சுலபமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் 11 (10) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே கேப்டன் கேஎல் ராகுலும் 8 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.
அந்த நிலைமையில் எதிர்பாராத வகையில் களமிறக்கப்பட்ட கரன் சர்மா 4 (4) ரன்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் 33/3 என்று தடுமாறிய லக்னவோவுக்கு க்ருனால் பாண்டியா 5 (5) ஆயுஷ் படோனி 8 (11) என முக்கியமான இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெரிய அதிர்ச்சி கொடுத்தனர்.
மிரட்டிய குஜராத்:
அதனால் 11 ஓவர்களில் 61/5 என்று திணறிய லக்னோவை காப்பாற்றுவார் என கருதப்பட்ட மார்க்கஸ் ஸ்டோனிஸ் தேவையில்லாமல் 2 (2) ரன்களில் ரன் அவுட்டாக ஆல்-ரவுண்டர் ஜேசன் ஹோல்டரும் 1 (2) ரன்னில் அவுட்டானதால் அந்த அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் போராடிக்கொண்டிருந்த தீபக் ஹூடா 27 (26) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் குஜராத்தின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் வெறும் 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ வெறும் 82 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்தது.
குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதன் நட்சத்திர பவுலர் ரசித் கான் 4 விக்கெட்டுகளை சாய்க்க அவருடன் கைகோர்த்த இளம் தமிழக வீரர் சாய் கிஷோர் முதல் போட்டியிலேயே அதுவும் 2 ஓவர்களில் வெறும் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். அவர்களுடன் குல்தீப் சென் 2 விக்கெட், முகமது ஷமி 1 விக்கெட் எடுத்தனர். இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் 11 போட்டிகளில் 9-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து ஐபிஎல் 2022 தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்று சாதனை படைத்தது.
குஜராத் மாஸ்:
முன்னதாக கடந்த சில போட்டிகளில் இன்று போலவே டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் பெரிய ரன்கள் எடுக்காததாலும் பந்துவீச்சில் சொதப்பியதாலும் அந்த அணி தோல்வி அடைந்தது. அதேபோல் இன்றைய போட்டியிலும் டாஸ் வென்று பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட அந்த அணி வெறும் 144 ரன்கள் மட்டுமே எடுத்ததால் லக்னோ எளிதாக வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் நினைத்தனர்.
ஆனால் குறைவான இலக்காக இருந்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்று ஒவ்வொரு ஓவரிலும் தீயாய் வேலை செய்த குஜராத் பவுலர்கள் அதிரடியாக பந்துவீசி குயின்டன் டி காக், கேஎல் ராகுல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களை பெரிய ரன்களை அடிக்க விடாமல் ஆரம்பத்திலேயே மடக்கி பிடித்து பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பி 145 என்ற இலக்கை கூட எட்டிப் பிடிக்க முடியாத லக்னோ கடைசி 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வந்த நிலையில் மொத்தம் பங்கேற்ற 12 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்தது. ஆனாலும் அடுத்த 2 போட்டிகளில் 1 வெற்றியை பெற்றால் கூட அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு சந்தேகமில்லாமல் தகுதி பெற்றுவிடும்.