KKT vs GT : தமிழக வீரரை பந்தாடி குஜராத்துக்கு மிரட்டல் ஃபினிஷிங் கொடுத்த விஜய் சங்கர் – கொல்கத்தாவுக்கு பதிலடியுடன் முதலிடம்

Vijay Shankar KKr vs GT
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 39வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. மழையால் ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு தமிழக வீரர் ஜெகதீசன் 4 பவுண்டரியுடன் 19 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடிய நிலையில் அடுத்ததாக யாரும் எதிர்பாராத வகையில் களமிறங்கிய ஷார்துல் தாகூர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதைத்தொடர்ந்து இம்பேக்ட் வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 11 (14) ரன்களில் தடுமாற்றமாக செயல்பட்டு அவுட்டான நிலையில் அடுத்து வந்த கேப்டன் நித்திஷ் ராணாவும் ஜோஸ் லிட்டில் வீசிய அதே ஓவரில் 4 (3) ரன்களில் நடையை கட்டினார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட ரஹமதுல்லா குர்பாஸ் 5 பவுண்டரி 7 சிக்ஸருடன் அரை சதமடித்து 81 (39) ரன்களை விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

குஜராத் பதிலடி வெற்றி:
இறுதியில் ரிங்கு சிங் 19 (20) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் கடைசி நேரத்தில் தன்னுடைய பிறந்தநாளில் வெளுத்து வாங்கிய ஆண்ட்ரே ரசல் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 34 (19) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் கொல்கத்தா 179/7 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்களையும் ஜோஸ் லிட்டில், நூர் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 180 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில்லுடன் இணைந்து 41 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட ரித்திமான் சஹா 10 (10) ரன்களில் அவுட்டானார்.

அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 2வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 2 பவுண்டரி 1 சிக்சருடன் 26 (20) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர்களுடன் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் 8 பவுண்டரியுடன் 49 (35) ரன்களில் முக்கிய நேரத்தில் சுனில் நரேன் சுழலில் அவுட்டாகி அரை சதத்தை நழுவ விட்டு சென்றார். அந்த நிலைமையில் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்யும் பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

குறிப்பாக ஆரம்பத்தில் சற்று மெதுவாக துவங்கிய விஜய் சங்கர் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி குஜராத்தை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். அதிலும் குறிப்பாக கடைசி 4 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்ட போது மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி வீசிய 17வது ஓவரின் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்ட அவர் மீண்டும் கடைசி பந்தில் பெரிய சிக்சரை தெறிக்க விட்டார். அப்படி தமிழக வீரரை மற்றொரு தமிழக வீரர் அதிரடியாக எதிர்கொண்டது தமிழக ரசிகர்களை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்தது.

அதே வேகத்தில் வெளுத்து வாங்கிய விஜய் சங்கர் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 51* (24) ரன்கள் குவித்து சூப்பர் ஃபின்சிங் கொடுக்க அவருடன் விளையாடிய டேவிட் மில்லர் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 32* (18) ரன்கள் எடுத்ததால் 17.5 ஓவரிலேயே 180/3 ரன்கள் எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. மறுபுறம் பேட்டிங்க்கு சாதகமான ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 200 ரன்கள் எடுக்க தவறிய கொல்கத்தா பந்து வீச்சில் கொஞ்சமும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் படுதோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: வீடியோ : நியூஸிலாந்தை ஏமாற்ற பாகிஸ்தான் செய்த வேலையா? அம்பயர்களிடம் சிக்கிய பரிதாபம், நடந்தது என்ன

அப்படி 2 ஓவர்கள் மீதம் வைத்து அபார வெற்றி பெற்ற குஜராத் இதே சீசனில் கடந்த போட்டியில் ரிங்கு சிங்கிடம் பறிகொடுத்த வெற்றியை இம்முறை வசமாக்கி கொல்கத்தாவுக்கு தக்க பதிலடி கொடுத்து புள்ளி பட்டியலிலும் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அசத்தியுள்ளது.

Advertisement