ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 60வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 200 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்து அசத்தியது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் கே.எல். ராகுல் சதத்தை அடித்து 112* ரன்கள் குறித்து அசத்தினார்.
அவருடன் அபிஷேப் போரேல் 30, கேப்டன் அக்சர் படேல் 25, ஸ்டப்ஸ் 21* ரன்கள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய குஜராத்துக்கு துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பம் முதலே நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்கள். பவர் பிளே முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி ஓவருக்கு 10 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தது.
சாதனை ஜோடி:
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்து அசத்தினார்கள். அவர்களை பிரிக்க டெல்லி அணி போட்ட அனைத்து திட்டங்களையும் முறியடித்த அந்த ஜோடி தொடர்ந்து ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. நேரம் செல்ல செல்ல அபாரமாக விளையாடிய அந்த ஜோடியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சதத்தை அடித்து அசத்தினார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய கில் 95* (53) ரன்கள் குவித்து அட்டகாசம் செய்தார். இறுதியில் சுதர்சன் 108* (61) ரன்கள் எடுத்த உதவியுடன் 19 ஓவரிலேயே 205/0 ரன்கள் எடுத்த குஜராத் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையும் சேர்த்து 12 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்ற அந்த அணி 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
3 அணிகள் பிளே ஆஃப்:
மறுபுறம் டெல்லி தோல்வியை சந்தித்ததால் தலா 17 புள்ளிகளைப் பெற்றுள்ள பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு அடுத்தடுத்து தகுதி பெற்றுள்ளன. எஞ்சியுள்ள 1 இடத்திற்கு டெல்லி மற்றும் மும்பை அணிகள் போட்டியிடுகின்றன. இந்தப் போட்டியில் விக்கெட்டே இழக்காமல் கில் – சுதர்சன் குஜராத்தை 200 ரன்களை வெற்றிகரமாக தொட வைத்தனர்.
இதையும் படிங்க: ஓய்வை வாபஸ் பெற்று இந்திய ரசிகர்களுக்காக இந்த சாதனை செய்ங்க ப்ளீஸ்.. கிங் கோலிக்கு திவாரி கோரிக்கை
இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அதிகபட்ச இலக்கை (200) வெற்றிகரமாக சேசிங் செய்ய உதவிய ஜோடி என்ற சரித்திர சாதனையை கில் – சுதர்சன் படைத்துள்ளார்கள். இதற்கு முன் 2017ஆம் ஆண்டு குஜராத்துக்கு எதிராக கெளதம் கம்பீர் – கிறிஸ் லின் 184 ரன்களை விக்கெட்டை இழக்காமல் கொல்கத்தா சேசிங் செய்ய உதவியதே முந்தைய சாதனை.



