ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி அறிமுகமானார். அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் இளம் வயதில் விளையாடிய வீரராக சாதனை படைத்த அவர் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதே வேகத்தில் குஜராத்துக்கு எதிராக 35 பந்தில் 100 ரன்கள் அடித்த அவர் 101 (38) ரன்களை வெளுத்து வாங்கி ராஜஸ்தான் வெற்றியில் பங்காற்றினார்.
அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்தார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வேகமாக சதத்தை அடித்த இந்திய வீரராகவும் அவர் சாதனை படைத்தார். அதற்கடுத்த போட்டியில் டக் அவுட்டானாலும் வருங்காலத்தில் அவர் தொடர்ச்சியாக அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சச்சின் – காம்ப்ளி:
இந்நிலையில் வைபவ் சூர்யவன்சி 16 வயதில் அறிமுகமாகி ஜாம்பவனாக உருவெடுத்த சச்சின் டெண்டுல்கர் போல வரும் திறமையுடையவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். ஆனால் பிரித்வி ஷா, வினோத் காம்ப்ளி போல் அவரும் காணாமல் போவதற்கு வாய்ப்புள்ளதாக சேப்பல் எச்சரித்துள்ளார். அந்த இரண்டும் பிசிசிஐ கைகளில் இருப்பதாக தெரிவிக்கும் சேப்பல் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“சச்சின் டெண்டுல்கர் இளம் வீரராக வந்து திறமை இருந்ததால் மட்டும் வெற்றி பெறவில்லை. மாறாக அவருக்கு ஒரு திடமான அமைப்பு ஆதரவாக இருந்தது. அவரிடம் நல்ல மனோபாவம் இருந்தது. அவரை சுற்றி புத்திசாலிப் பயிற்சியாளர் மற்றும் தேவையற்ற விஷயங்களில் இருந்து பாதுகாத்த குடும்பம் இருந்தது. மறுபுறம் அவருக்கு சமமான திறமையுடைய வினோத் காம்ப்ளி இருந்தார்”
சேப்பல் எச்சரிக்கை:
“மிகவும் சுறுசுறுப்பான அவர் புகழ் மற்றும் ஒழுக்கத்தை சமநிலைப்படுத்தப் போராடினார். அவரது வியத்தகு எழுச்சியை போலவே வீழ்ச்சியும் இருந்தது. பிரிதிவி ஷா அதே போல விழுந்த மற்றொரு வீரர். ஆனால் இப்போதும் அவரால் மீண்டும் உச்சத்துக்கு வருவதற்கான வழியைக் கண்டறிய முடியும். இது போன்ற கதைகள் இளம் வீரர்களின் திறமையைப் பற்றி கேள்வி எழுப்பவில்லை”
இதையும் படிங்க: இனிமேல் சிஎஸ்கே அணிக்கு வெற்றிகளை இதான் முக்கியம்.. ஆர்சிபி போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி பேட்டி
“ஆனால் அந்தத் திறன் எவ்வாறு வளர்க்கப்படுகிறது அல்லது சுரண்டப்படுகிறது என்ற ஞானத்திற்கு அப்போதைய சூழ்நிலைகளை சவால் விடும். எனவே பிசிசிஐ, அணி உரிமையாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் ஊடகங்கள் வைபவை பாதுகாக்க வேண்டிய கடமையைக் கொண்டவர்கள். திறமையை குமிழியால் மூட முடியாது. ஆனால் அதற்கு ஒரு இடையகத்தை வழங்க முடியும். அந்தத் திறமையை வளர்க்க வேண்டும் சந்தைப்படுத்துதல் (விளம்பரம்) கூடாது” என்று கூறினார்.



