மகளிர் ஐபிஎல் : வெறித்தன பினிஷிங் செய்த கிரேஸ் ஹாரீஸ், தோனியை பேட்டில் வைத்து குஜராத்தை பந்தாடிய இளம் வீராங்கனை

- Advertisement -

வரலாற்றின் முழுமையான முதல் மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தப் போகும் இத்தொடரில் மார்ச் 5ஆம் தேதியன்று நடைபெற்ற 3வது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் உத்திரபிரதேச வாரியர்ஸ் அணிகள் மோதின. நவி மும்பையில் இருக்கும் டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169/6 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு மேக்னா 24 (15) டுங்லி 13 (11) சதர்லேண்ட் 8 (10) சுஷ்மா வர்மா 9 (13) என முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் 3வது களமிறங்கி அதிரடி காட்டிய இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் 7 பவுண்டரியுடன் 46 (32) ரன்கள் குவித்த நிலையில் கடைசி நேரத்தில் அஸ்லே கார்ட்னர் 25 (19) ரன்களும் ஹேமலதா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21* (13) ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல பினிஷிங் கொடுத்தனர். உத்தரபிரதேசம் சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா மற்றும் சோபி எக்லஸ்டென் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 170 ரன்களை துரத்திய உத்திரபிரதேச அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி 7 (8) ஸ்வேதா செராவத் 5 (6) என தொடக்க வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

பேட்டில் தோனி:
போதாகுறைக்கு தஹிலா மெக்ராத் 0 (1) தீப்தி சர்மா 11 (16) என மிடில் ஆர்டர் வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் பெரிய பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு 3வது இடத்தில் களமிறங்கி போராடிய இளம் இந்திய வீராங்கனை கிரண் நவ்கிர் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 53 (43) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் ஷைக் 0 (1) தேவிகா வைத்யா 4 (7) என லோயர் ஆர்டர் வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் கடைசி 26 பந்துகளில் 65 ரன்கள் தேவைப்பட்ட உத்திரபிரதேசத்தின் தோல்வி உறுதி என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது 5வது இடத்தில் களமிறங்கி வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீராங்கனை கிரேஸ் ஹாரீஸ் நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற சோபி எக்லஸ்டென் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 22* (12) ரன்கள் எடுத்து கை கொடுத்தார். அதை பயன்படுத்திய கிரேஸ் ஹாரீஸ் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு அழைத்து வந்ததால் கடைசி ஓவரில் உத்திர பிரதேச அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

ஆனால் அனபேல் சதர்லேண்ட் வீசிய அந்த ஓவரில் 2 ஒய்ட் ரன்களுடன் 6, 2, 4, 6 என அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்ட கிரேஸ் ஹாரிஸ் சிக்ஸருடன் அபார பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.5 ஓவரில் 175/7 ரன்கள் எடுத்த உத்தர பிரதேசம் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 7 பவுண்டரி 3 சிக்சருடன் 59* (26) ரன்கள் விளாசிய கிரேஸ் ஹாரிஸ் ஆட்டநாயகி விருதை வென்றாலும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரிந்த போது 3வது இடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 53 ரன்கள் குவித்து நல்ல அடித்தளமிட்ட கிரண் நவ்கிர் அறிவிக்கப்படாத ஆட்டநாயகியாக செயல்பட்டார் என்று சொல்லலாம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் தீவிர ரசிகை ஆவார். குறிப்பாக அவரை தனது ரோல் மாடலாக பின்பற்றி வரும் அவர் அவரை போலவே அதிரடியாக விளையாடும் ஸ்டைலை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: இப்போ தான் நிம்மதியா பல் துலக்குறேன், வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டேன் – விபத்துப் பின் ரிஷப் பண்ட் மனம் திறந்த பேட்டி

மேலும் கடந்த வருடம் நடைபெற்ற மினி ஐபிஎல் தொடரில் இதேபோல ஒரு போட்டியில் அரை சதமடித்து தனது அணியை வெற்றி பெற வைத்த அவர் தோனி தான் தம்முடைய ரோல் மாடல் என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.  ஆனால் தற்போது ஒரு படி மேலே சென்றுள்ள அவர் “எம்எஸ்டி 07” என்ற தோனியின் முதல் எழுத்துக்களையும் அவருடைய மேஜிக் நிறைந்த ஜெர்சி நம்பரையும் தன்னுடைய பேட்டில் எழுதி வைத்து இப்போட்டியில் எதிரணியை பந்தாடியாது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement