அப்பாவிடம் செம்மையா திட்டு வாங்கினேன் – முதல் சாதனை சதத்தின் ருசிகர பின்னனியை பகிரும் சுப்மன் கில்

Shubman-Gill
- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றுள்ளது. ஆகஸ்ட் 18, 20 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் மோசமாக செயல்பட்டு ஆரம்பத்திலேயே தொடரை இழந்த ஜிம்பாப்வே 3வது போட்டியில் கடுமையாக போராடி வெறும் 13 ரன்கள் வித்தியாசத்தில் மட்டும் தோற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 289 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் சதமடித்து 130 (97) ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ப்ராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதன்பின் 290 ரன்களை துரத்திய ஜிம்பாப்வேவுக்கு சீன் வில்லியம்ஸ் 45 ரன்கள் எடுத்ததை தவிர எஞ்சிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சிகந்தர் ராசா 9 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 115 (95) ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா இளம் வீரர்களை வைத்து மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

- Advertisement -

சாதனை கில்:
இந்த வெற்றிக்கு 130 ரன்கள் குவித்ததுடன் கடைசி நேரத்தில் மிரட்டிய சிகந்தர் ராசா கொடுத்த கேட்ச்சை கச்சிதமாக தாவிப் பிடித்த சுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேலும் 82*, 33, 130 என தொடர் முழுவதும் அபாரமாக செயல்பட்ட அவர் 5 கேட்ச்களையும் பிடித்ததால் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் தொடர் நாயகன் விருதை வென்றிருந்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 22 வயதுக்கு முன்பாக வெளிநாட்டில் 2 தொடர் நாயகன் விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

கடந்த 2018இல் இந்தியா வென்ற ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையின் தொடர் நாயகன் விருதையும் 2019 ஐபிஎல் சிறந்த இளம் வீரர் விருதையும் வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டுக்காக அறிமுகமாகி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். 2021இல் ஆஸ்திரேலியாவில் இந்தியா பதிவு செய்த மறக்க முடியாத காபா டெஸ்ட் வெற்றிக்கு 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் நல்ல தொடக்கத்தை பெற்றபோதிலும் சதத்தை அடிக்க முடியாமல் தவித்தார்.

- Advertisement -

தந்தையின் கண்டிப்பு:
குறிப்பாக 3வது ஒருநாள் போட்டியில் 98* ரன்கள் எடுத்த அவரை சதமடிக்க விடாமல் மழை தடுத்தது. அந்த நிலைமையில் இந்த தொடரில் 2வது போட்டியில் 33 ரன்களில் ஆட்டமிழந்த பின் தனது தந்தை திட்டியதால் ஏற்பட்ட பொறுப்புதான் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாச முக்கிய காரணமென்று சுப்மன் கில் வெளிப்படையாக கூறியுள்ளார். அதனால் தனது முதல் சதத்தை தனது தந்தைக்கு சமர்ப்பித்து போட்டி முடிந்த பின் இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“90களில் விளையாடிக் கொண்டிருந்த போது எனது இதயம் வேகமாக துடித்தது. இதற்கு முன் 90களில் 3 முறையில் அவுட்டான நான் சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தை அடிக்கவில்லை. எனவே இந்த சதம் மிகவும் ஸ்பெஷலானது. எனக்கு என்னுடைய தந்தை தான் முதன்மையான பயிற்சியாளர். 2வது போட்டியில் 33 ரன்களில் அவுட்டான போது அவர் சற்று திட்டி அறிவுரையும் ஆலோசனையும் வழங்கினார். எனவே இந்த சதம் அவருக்கானது. இந்த பேட் சிறப்பாக இருப்பதால் அரை சதமடித்ததும் அதை பாதுகாப்பதற்காக நான் வேறு பேட்டில் விளையாடினேன்”

“சிகந்தர் ராசா மற்றும் ப்ராட் எவன்ஸ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசியதால் இதர பவுலர்களை நான் அடிக்க முயற்சித்தேன். அதேபோல் டாட் பந்துகளை குறைத்துக்கொண்டு கடினமாக அடிக்காமல் டைமிங் கொடுத்த மட்டும் அடிக்க முயற்சித்தேன்” என்று கூறினார். முதல் சதத்தை அடிக்க உதவிய பேட்டை பத்திரப்படுத்தி கொண்டதாக தெரிவிக்கும் சுப்மன் கில் தனது தந்தை லக்விந்தர் சிங் தான் தன்னுடைய முதன்மையான பயிற்சியாளர் என்று கூறுவது தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்றே கூறலாம்.

அவரின் ஆலோசனைகளால் முதல் சதத்திலேயே ஜிம்பாவ்வே மண்ணில் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையையும் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement