179க்கு ஆல் அவுட்.. ஆஸ்திரேலியாவுக்கு மேஜிக் காட்டிய கிளன் பிலிப்ஸ்.. 16 வருடம் கழித்து அட்டகாசமான சாதனை

- Advertisement -

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் துவங்கியது. பிப்ரவரி 29ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கடுமையாக போராடி 383 ரன்கள் அடித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேமரூன் கிரீன் சதமடித்து 174* ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் பெற்றது. அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 71 (70), மாட் ஹென்றி 42 (34) ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

கிளன் பிலிப்ஸ் மேஜிக்:
அதன் பின் நியூசிலாந்துக்கு பாலோ ஃஆன் கொடுக்காத ஆஸ்திரேலியா 204 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையுடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது. அப்போது அந்த அணி சிறப்பாக விளையாடி கண்டிப்பாக 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் 0, லபுஸ்ஷேன் 2 ரன்களில் டிம் சௌதீ வேகத்தில் அவுட்டானார்கள்.

அதைத் தொடர்ந்து நைட் வாட்ச்மேனாக வந்து தொல்லையை கொடுத்த நேதண் லயனை 41 ரன்களில் மாட் ஹென்றி காலி செய்தார். ஆனால் அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் நங்கூரமாக நின்ற உஸ்மான் கவாஜாவை 28 ரன்களில் தன்னுடைய மாயாஜால சுழலால் ஸ்டம்ப்பிங் முறையில் அவுட்டாக்கிய கிளன் பிலிப்ஸ் அடுத்ததாக வந்த டிராவிஸ் ஹெட்டை 29 ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அதோடு நிற்காமல் அதற்கடுத்ததாக வந்த மிட்சேல் மார்ஷா கோல்டன் டக் அவுட்டாக்கிய அவர் அலெக்ஸ் கேரியையும் 3 ரன்களில் காலி செய்தார். அந்த வகையில் முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டாக்கி ஆஸ்திரேலியாவை 2வது இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக க்ளன் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 16 வருடங்கள் கழித்து தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை கிளன் பிலிப்ஸ் படைத்துள்ளார். கடைசியாக 2008ஆம் ஆண்டு டுனிடின் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் முன்னாள் நியூஸிலாந்து ஜாம்பவான் வீரர் டேனியல் வெட்டோரி 5 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

இதையும் படிங்க: தோனிக்கு இணையாக இவராலும் அசத்த முடியும்.. அந்த அளவிற்கு நல்லா ஆடுறாரு.. இளம் வீரருக்கு – அணில் கும்ப்ளே பாராட்டு

பொதுவாக நியூசிலாந்து மைதானங்கள் வேகத்திற்கு சாதகமாக இருக்கும். அந்த வகையில் இப்போட்டி நடைபெறும் வெலிங்டன் மைதானமும் வேகத்திற்கு சாதகமாகவே இருந்து வருகிறது. ஆனால் அந்த மைதானத்திலும் அதுவும் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளரான கிளன் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தது உண்மையாகவே பாராட்டுக்குரியதாகும். இதைத்தொடர்ந்து 369 என்ற கடினமான இலக்கை நியூசிலாந்து துரத்தி வருகிறது.

Advertisement