இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்ததோடு சேர்த்து ரோஹித் சர்மாவின் சாதனையையும் சமன் செய்த – கிளென் மேக்ஸ்வெல்

Maxwell-and-Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று கௌகாத்தி நகரில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது ருதுராஜ் கெய்க்வாட்டின் அபாரமான சதம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது.

பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வேளையில் ஒருபுறம் நங்கூரம் போன்று நிலைத்து நின்று விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் இறுதிவரை போட்டியை கொண்டு சென்று தனி ஒருவராக அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

- Advertisement -

குறிப்பாக கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 40 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டாலும் அதனையும் சிறப்பாக கையாண்டு அந்த சூழ்நிலையிலும் பதட்டமடையாமல் அதிரடியை வெளிப்படுத்தி அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த போட்டியில் 48 பந்துகளை சந்தித்த மேக்ஸ்வெல் 8 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 104 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் அவர் ஏகப்பட்ட சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனைகளாவது :

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரராக கிளென் மேக்ஸ்வெல் தற்போது நான்கு சதங்களுடன் முன்னிலையில் உள்ளார். அதேபோன்று ஆஸ்திரேலியா அணி சார்பாக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆரோன் பின்ச் மற்றும் ஜாஸ் இங்கிலீஷ் ஆகியோருடன் 47 பந்துகளில் சதம் அடித்த கிளென் மேக்ஸ்வெல்லும் இணைந்துள்ளார். மேலும் சேசிங்கின் போது மூன்றாவது முறையாக சதம் அடித்து வெற்றிகரமாக போட்டியை முடித்தும் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : அவர் சொன்னா சொன்னது தான். அடுத்த ஆண்டு தோனி விளையாடுவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – காசி விஸ்வநாதன்

அதோடு இந்த போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் ரோகித் சர்மாவின் சாதனை ஒன்றினையும் மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். அந்த வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரோஹித் சர்மாவின் நான்கு சதங்கள் சாதனையை இந்த சதத்தின் மூலம் மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். இருப்பினும் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் அடித்த நான்கு சதங்களுமே துவக்க வீரராக களமிறங்கி அடிக்கப்பட்டது. ஆனால் மேக்ஸ்வெல் மட்டுமே துவக்க வீரராக களமிறங்காமல் நான்கு சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement