பொறுத்தது போதும், அதை உடனடியாக செஞ்சு ரிஷப் பண்ட்க்கு புரிய வைங்க – ஸ்ரீகாந்த் அதிரடி கருத்து

Rishabh Pant Kris Srikkanth
- Advertisement -

நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் வென்றாலும் அடுத்ததாக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரை அதே மழையால் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. இதனால் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே குறைந்தபட்சம் ஒருநாள் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலைமையை சந்தித்துள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் ஏன் தொடர்ந்து விளையாடி வருகிறார் சஞ்சு சாம்சன் ஏன் தொடர்ந்து கழற்றி விடப்பட்டு வருகிறார் என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் காலம் காலமாக நிலையான வாய்ப்புகளை பெறாமல் வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் சஞ்சு சாம்சன் இந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் பெரும்பாலும் அசத்தலாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

Rishabh Pant Sanju Samson

- Advertisement -

மறுபுறம் அறிமுகமான 2017 முதல் 65 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத ரிஷப் பண்ட் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் அடித்த ஒரு சதத்தை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட்டதில்லை. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் சாதனைகளை படைத்து தன்னை நிரூபித்து காட்டியுள்ள அவரை வருங்கால கேப்டனாகவும் அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் உருவாக்க நினைக்கும் அணி நிர்வாகம் அதற்காக ஏராளமான விமர்சனங்களை தாங்கி கொண்டு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது.

பிரேக் கொடுங்க:

ஆனால் ராஜா வீட்டுப் பிள்ளையை போல் வாய்ப்பின் அருமை உணராத ரிசப் பண்ட் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பெரும்பாலும் தேவையற்ற குருட்டுத்தனமான ஷாட் அடித்து விக்கெட்டை எதிரணிக்கு பரிசளித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவது போல் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்படுவார் என்பதற்காக ஓப்பனிங் வாய்ப்பை அணி நிர்வாகம் கொடுத்தது. அதில் அவர் எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காணாமல் சுமாராகவே செயல்பட்டார்.

Rishabh Pant

இதனால் இவர் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் பிளேயர் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இதற்கு மேலும் எவ்வளவு வாய்ப்புகள் தான் கொடுப்பது என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உடனடியாக கொஞ்சம் பிரேக் கொடுத்து வாய்ப்புகளின் அருமையை ரிசப் பண்டுக்கு உணர்த்த வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “வேண்டுமானால் அவருக்கு பிரேக் கொடுத்து கொஞ்ச நேரம் காத்திருந்து பின்பு மீண்டும் இந்தியாவுக்கு விளையாட வாருங்கள் என்று நீங்கள் சொல்லலாம். இந்திய நிர்வாகம் அவரை சரிவர கையாளவில்லை”

- Advertisement -

“ஏனெனில் ரிஷப் பண்ட் தமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை. அவரால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். என்னடா பண்ட்டு? நீ தொடர்ந்து இப்படி வாய்ப்புகளை வீணடித்து வருகிறாய். உலகக்கோப்பை வரும் நிலையில் இது போன்ற சமயங்களில் நீங்கள் அடித்து நொறுக்கினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டாமா? மேலும் ஏற்கனவே நிறைய பேர் ரிஷப் பண்ட் ரன்கள் அடிக்கவில்லை என்று சொல்வது எரியும் விமர்சன நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது”

SRIKKANTH

“இதனால் அவர் தமக்கு தாமே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். என்னை பொறுத்த வரை அவர் தற்சமயத்தில் தன்னைத்தானே மாற்றி உருவாக்க வேண்டும். அவர் விரைவில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஏதாவது பெரிதாக முயற்சிக்க வேண்டும். என்னை கேட்டால் இது போன்ற தடுமாற்றமான நேரங்களில் நீங்கள் முதலில் நிலையாக நின்று செட்டிலாகி பின்பு அதிரடியாக விளையாடுங்கள். ஆனால் அவரோ அனைத்து போட்டிகளிலும் தன்னுடைய விக்கெட்டை எதிரணிக்கு பரிசாக கொடுக்கும் வகையில் அவுட்டாகி செல்கிறார்” என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

முன்னதாக இது போன்ற விமர்சனங்கள் நிறைய எழுந்த போது ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவு கொடுத்து வந்த ஸ்ரீகாந்தே தற்போது பிரேக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அந்தளவுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக அல்லாமல் சுமாராக செயல்படும் ரிஷப் பண்ட்டை அதிரடியாக நீக்கி வாய்ப்பின் அருமையை அணி நிர்வாகம் உணர்த்த வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

Advertisement