
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்று வரும் வேளையில் இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த தொடர் இந்த 2025-ஆம் ஆண்டு 18 ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. மார்ச் 22-ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன.
இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நடைபெற்று அனைத்து அணிகளிலும் வீரர்கள் மாற்றம் நடைபெற்றுள்ளதால் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதேபோன்று இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி இடத்தை பிடிக்கும் அணி எது? என்பது குறித்த கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்க்றிஸ்ட் 2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தான் கடைசி இடத்தை பிடிக்கும் என்று ஒரு வித்தியாசமான கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் ஆர்.சி.பி ரசிகர்களுக்கோ அல்லது விராட் கோலிக்கோ எதிரானவன் கிடையாது. ஆனாலும் என்னை பொறுத்தவரை இந்த தொடரில் அந்த அணி தான் கடைசி இடத்தை பிடிக்கும். ஏனெனில் ஆர்சிபி அணியில் நிறைய இங்கிலாந்து வீரர்கள் இருக்கிறார்கள். ஆர்.சி.பி அணி மீது எனக்கு எந்த விரோதமும் கிடையாது.
ஆனால் ஒரே அணியை சேர்ந்த இத்தனை வீரர்களை வாங்கியதன் காரணம் என்ன? என்பதை ரசிகர்கள் தான் கேட்க வேண்டும். அதேபோன்று இங்கிலாந்து வீரர்கள் அதிகளவில் இருப்பதனாலே அவர்களுக்கு கடைசி இடத்திற்கு தள்ளப்படுவார்கள் என நினைப்பதாக கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். அண்மைக்காலமாகவே இங்கிலாந்து அணி சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் அவர்களை கிண்டல் செய்யும் வகையில் கில்கிறிஸ்ட் இப்படி ஒரு கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க : எனக்கு வலைவீசி பாத்தாங்க.. ஆனா நான் சன் ரைசர்ஸ் அணிதான் முக்கியம்னு விட்டுட்டேன் – நிதீஷ் ரெட்டி
அதேபோன்று மற்றொரு முன்னாள் வீரரான மைக்கல் வாகன் கூறும்போது : இம்முறை டெல்லி தான் கடைசி இடத்தைப் பிடிக்கும் என்றும் டெல்லி அணியில் இந்திய வீரர்கள் எந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுவார்கள் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.