
இந்திய அணியில் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த பல தொடர்களாகவே மோசமான பேட்டிங் காரணமாக தடுமாறி வந்த வேளையில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது மிக முக்கியமான தொடராக பார்க்கப்பட்டது. இவ்வேளையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது துவக்கம் சரியாக இருந்தாலும் பெரியளவு ரன்களை எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து அடுத்ததாக நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அந்த போட்டியில் அவர் அடித்த சதம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 51-வது சதமாக மாறியது மட்டுமின்றி பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி இருந்தது.
மேலும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற அவர் முக்கிய தூணாக இருப்பார் என்றும் பலரது மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் அசத்தி வரும் விராட் கோலி குறித்து பேசிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான ஹெர்சல் கிப்ஸ் வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி ரன் எடுப்பதை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான அவரது ஆட்டத்தை பார்க்க எனக்கு எப்போதுமே விருப்பம் தான்/ இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த தொடரில் விராட் கோலியின் ஆட்டம் இன்னும் தீவிரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவருடைய ரன் எடுக்கும் பசி மாறும் உடற்தகுதி ஆகிய மிகச் சிறப்பாக உள்ளன. எனவே நிச்சயம் விராட் கோலி இந்த தொடரில் அசத்துவது மட்டுமின்றி இன்னும் நான்கு ஆண்டுகள் விளையாடுவார் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க : இந்தியா மாதிரி பாகிஸ்தானிலும் வெளிச்சம் இல்லையா? இங்கிலாந்து வீரரை கிண்டலடித்த கவாஸ்கர்.. காரணம் என்ன?
தற்போது இந்திய அணி விளையாடி வருவதை பார்க்கையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி தான் கைப்பற்ற அதிகமான வாய்ப்புள்ளது. அதே வேளையில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கும் இந்த தொடரில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கிப்ஸ் கூறியுள்ளார்.