
2024-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் ஒன்றில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலிய அணியானது அரையிறுதி சுற்றிற்கு கூற முன்னேறாமல் வெளியேறியது. மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறாதது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே வேளையில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது பாராட்டினை பெற்று இருந்தது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா அணி முன்னேறாத வேளையில் குரூப் ஒன்று சுற்றின் இறுதிப்போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தனது ஓய்வினை அறிவித்திருந்தார்.
ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் ஓய்வை அறிவித்த அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரோடு டி20 வடிவத்திலும் தனது முடிவை அறிவித்து இருந்தார்.
ஆனாலும் ஊழியர்கள் மற்றும் ஆஸ்திரேலிய நிர்வாகம் விரும்பினால் தான் 2025-ஆம் ஆண்டு சாம்பியன் டிராபியில் பங்கேற்க தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தார். இப்படி வார்னர் தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தாலும் அவர் இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் தேர்வுக்குழு தலைவரான ஜார்ஜ் பெய்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டேவிட் வார்னர் ஒரு ஓய்வு பெற்ற வீரர் என்பதே எங்களது புரிதல். அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நம்ப முடியாத பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது இந்த பங்களிப்பை பாராட்டலாம். ஆனால் இனிவரும் எங்களது அணியின் திட்டத்தில் அவர் இடம்பெற முடியாது என்று உறுதியாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க : வேணான்னு சொன்ன ஃபீல்டிங் வெச்சாரு.. உடனே விக்கெட்.. அப்போதான் நம்பனும்ன்னு புரிஞ்சிக்கிட்டேன்.. அர்ஷ்தீப் ஓப்பன்டாக்
இதன் மூலம் இனி டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியில் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்காக 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 22 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் என 6932 ரன்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.