ஆஷஸ் 2025/26 தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து 132 ரன்களுக்கு சுருட்டி 40 ரன்களை முன்னிலையாகப் பெற்று அசத்தியது.
அதன் காரணமாக இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரித்தது. ஆனால் அடுத்து விளையாடிய இங்கிலாந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்து 205 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதை 28.2 ஓவரில் சேசிங் செய்து வென்ற ஆஸ்திரேலியா பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடுகிறோம் என்று சொல்லக்கூடிய இங்கிலாந்துக்கு உண்மையான அதிரடி காட்டியது.
முட்டாள்தனமான பஸ்பால்:
மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையில் மற்றுமொரு தோல்வியை சந்தித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே ஆஷஸ் தொடரில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் 40 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் மூளையின்றி விளையாடி வெற்றியைக் கோட்டை விட்டதாக முன்னாள் கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பஸ்பால் அணுகுமுறை இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளிடம் வேலையாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை விடாமல் விளையாடும் இங்கிலாந்தை அவர் கடுமையாக விமர்சித்து பேசியது பின்வருமாறு. “இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக முன்னாள் வீரர்களின் விமர்சனங்கள் அல்லது கருத்துக்கள் முக்கியமல்ல என்று பென் ஸ்டோக்ஸ் உலகத்திற்கு சொன்னார். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் புதிதாக பரிணமித்து மாறியுள்ளதால் கடந்த காலம் பொருத்தமற்றது என்று அவர் சொன்னார்”
பாய்காட் விளாசல்:
“ஆனால் நீங்கள் தொடர்ந்து அதே முட்டாள்தனமான விஷயங்களை செய்து டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகளை தூக்கி எறிந்தால் உங்களை சீரியஸாக எடுத்துக் கொள்வது சாத்தியமற்றது. அவர்கள் எப்போதும் கற்றுக்கொள்ள போவதில்லை. ஏனெனில் அவர்கள் வெளியில் இருப்பவர்களின் பேச்சுக்களை எப்போதும் கேட்பதில்லை. ஏனென்றால் அவர்கள் தங்களுடைய சொந்த விளம்பரத்தை நம்புகிறார்கள்”
இதையும் படிங்க: அன்று இந்தியாவை சைலன்ட் பண்ண மாதிரி.. இன்று இங்கிலாந்தை முடிச்சுட்டீங்க.. ஹெட்டை பாராட்டிய சாஸ்திரி
“இங்கிலாந்து மூளையற்ற பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தோற்றது. ஏனெனில் வேகத்துக்கு சாதகமான பிட்ச்சில் பென் டக்கெட் – ஓலி போப் ஆகியோருடைய நல்ல ஆட்டத்தால் 100/1 என்ற சிறந்த துவக்கத்தைப் பெற்ற இங்கிலாந்துக்கு 40 ரன்கள் முன்னிலை என்பது மிகப்பெரியது. ஆனால் இந்த சுவாரசியமான இங்கிலாந்து அணி கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள். பஸ்பால் என்பது மோசமான மதிப்பீடு, அதீத தன்னம்பிக்கை, வெற்றியைக் கடினமாக்கும் காரணங்களைக் கொண்டது. இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளுக்கு எதிராக அது தோல்வியை சந்திப்பதற்கு பெரிய காரணியாக இருக்கிறது” என்று கூறினார்.



