டி.ஆர்.எஸ் செக் பண்ண பவர் கிடைக்கலையா ! வான்கடேவில் நிகழ்ந்த ட்ராமா – சேவாக் நியாயமான கேள்வி

Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பல சர்ச்சைகளுடன் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் நேற்று மே 12-ஆம் தேதி நடைபெற்ற 59-வது லீக் போட்டி உச்சகட்ட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் நிறைய கோப்பைகளை வென்ற வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பையும் சென்னையும் ஏற்கனவே தொடர் தோல்விகளால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த நிலையில் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு தொடக்க வீரர் டேவோன் கான்வே முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டானார்.

MI vs CSK 2

- Advertisement -

அதை அவுட்டில்லை என்று உணர்ந்த அவர் உடனடியாக ரிவியூ செய்யுமாறு அம்பயரிடம் கோரினார். ஆனால் போட்டி நடைபெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் பவர்கட் என்பதால் ரிவியூ செய்ய முடியாது என்று அம்பயர் பதிலளித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. மொத்தம் 2.4 ஓவர்கள் வரை அதே நிலைமை நீடித்த நிலைமையில் ராபின் உத்தப்பாவும் அதேபோல் எல்பிடபிள்யூ முறையில் சந்தேகமாக அவுட்டாகி சென்றார்.

சென்னை தோல்வி:
அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த சென்னைக்கு அடுத்து வந்த அம்பத்தி ராயுடு, மொயின் அலி, சிவம் துபே போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து மும்பையின் அதிரடியான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால் அந்த அணி 50 ரன்களை தாண்டுமா என்ற நிலை ஏற்பட்டது. நல்லவேளையாக கேப்டன் தோனி அதிரடியாக 36* ரன்கள் சேர்த்த போதிலும் இதர பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க தவறியதால் 16 ஓவரில் சென்னை 97 ரன்களுக்கு சுருண்டது. அதன்பின் 98 என்ற எளிய இலக்கை துரத்திய மும்பைக்கு சிறப்பாக பந்துவீசிய சென்னை பவுலர்கள் நெருக்கடி கொடுத்த போதிலும் 14.5 ஓவர்களில் 103/5 ரன்களை எடுத்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

MS Dhoni vs MI

சென்னை சார்பில் முகேஷ் சவுத்ரி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்து போராடிய போதிலும் 12 போட்டிகளில் 8-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி 2020க்கு பின் மீண்டும் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. எது எப்படி இருந்தாலும் இந்த போட்டியில் பவர்கட் சென்னையின் தோல்விக்கு ஒரு முக்கிய பங்காற்றியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

சேவாக் கேள்வி:
குறிப்பாக அவ்வளவு பெரிய மைதானத்தில் இரவை பகலாக்கும் வகையில் ராட்சத மின் விளக்குகள் எரிவதற்கு தேவையான அளவு மின்சாரம் இருந்தபோது ஒருசில தொலைக்காட்சி மற்றும் கம்ப்யூட்டர் இயங்கும் அளவுக்கு மின்சாரம் எப்படி கிடைக்காமல் போனது என்ற மர்மமான கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை மின்வெட்டு ஏற்பட்டாலும் இது போன்ற உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவதற்கு ஜெனரேட்டர் பயன்படுத்தாமல் ஐபிஎல் தொடரால் பல கோடி ரூபாய்களை வருமானமாக பெறும் பிசிசிஐ என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Sehwag

இதுபற்றி முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளது பின்வருமாறு. “மின்வெட்டு காரணமாக டிஆர்எஸ் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. இது போன்ற மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் ஜெனரேட்டர் பயன்படுத்த வேண்டும். எந்த வகையான சாப்ட்வேர் உபயோகப்படுத்தினாலும் அதை ஜெனரேட்டருடன் இணைக்க வேண்டும். பிசிசிஐக்கு இது ஒரு மிகப்பெரிய கேள்வி”

- Advertisement -

“மேலும் மின்வெட்டு ஏற்படும் போது என்ன நடக்கும்? மைதானத்தை பகலாக்கும் ராட்சத மின் விளக்குகளுக்கு மட்டும்தான் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறதா? தொடரை ஒளிபரப்பும் நிறுவனத்திற்கும் டிஆர்எஸ் சிஸ்டத்திற்கும் ஜெனரேட்டர் கிடையாதா? ஒருவேளை டிஆர்எஸ் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்யவில்லையெனில் மொத்த போட்டியிலும் அதை நிறுத்தியிருக்கு வேண்டும். ஏனெனில் சென்னைக்கு அதை மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தியது. மும்பை முதலில் பேட்டிங் செய்திருந்தாலும் அவர்களுக்கும் இதே பின்னடைவு ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : தோனி அடுத்த வருஷமும் சி.எஸ்.கே அணிக்காக ஆடுவாரு. ஏன் தெரியுமா? – விளக்கம் கொடுத்த கவாஸ்கர்

அதாவது மைதானத்தை பகலாக்கிய அவ்வளவு பெரிய மின் விளக்குகளுக்கு மின் வெட்டின் போது தேவையான மின்சாரம் கிடைத்தபோது டிஆர்எஸ் செய்வதற்கு தேவையான மின்சாரம் கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சேவாக் கூறினார். மேலும் இவ்வளவு பெரிய உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் தொடரை நடத்தும் பிசிசிஐ ஜெனரேட்டர் விஷயத்தில் இப்படி கோட்டை விட்டது கொஞ்சம் கூட நியாயமில்லை என்றும் அது சென்னையின் தோல்விக்கு ஒரு முக்கிய பங்காற்றியது என்றும் அவர் விமர்சித்துள்ளார். அத்துடன் சென்னைக்கு டிஆர்எஸ் வசதி கிடைக்காத நிலையில் நேற்றையப் மொத்த போட்டியிலும் அதை நிறுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் நியாயமான கருத்தைக் கூறினார்.

Advertisement