
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல் ஃபார்மட் கேப்டனாக சுப்மன் கில் உருவாக்கப்பட்டு வருகிறார். 2018 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு அதிக ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பக் காலங்களில் தடுமாற்றமாக விளையாடிய அவர் 2021 காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் மறக்க முடியாத வெற்றியில் பங்காற்றினார்.
அப்போதிலிருந்து ஓரளவு நிலையாக அசத்தத் துவங்கிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து பெரிய ரன்கள் குவித்து ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் மட்டும் அசத்தி வந்த கில் டி20 கிரிக்கெட்டில் கணிசமாக அசத்தினார். இதற்கிடையே 2023 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் குஜராத்தின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.
அங்கே அவரது தலைமையில் கடந்த வருடம் குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப் பெற்றது. அதனால் ரோஹித்துக்குப் பின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட கில் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் டி20 கிரிக்கெட்டிலும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கேப்டன்ஷிப் எனும் கடலில் உன்னை தூக்கிப்போட்டுள்ளோம். அதில் நீந்தி வா அல்லது மூழ்கி விடு என்று சுப்மன் கில்லிடம் சொல்லி பொறுப்பை ஒப்படைத்துள்ளதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி கம்பீர் பேசியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் கொடுக்கப்படும் போது நிகழ்ந்த உரையாடல்கள் எனக்கு நினைவிருக்கிறது”
“சுப்மன் கில்லிடம் நாங்கள் தெளிவாக ஒரு விஷயத்தை சொன்னோம். அதாவது “நாங்கள் உன்னை ஆழமான கடலில் தூக்கி எறிந்துள்ளோம். அங்கிருந்து வருவதற்கு உனக்கு 2 வழிகள் இருக்கிறது. ஒன்று நீ மூழ்கி விடுவாய் அல்லது நீ உலகத்தரம் வாய்ந்த நீச்சல் வீரராக வருவாய்” என்று சொன்னோம். என்னைப் பொறுத்த வரை இங்கிலாந்தில் அவர் அடித்த 750 ரன்கள் முக்கியமல்ல”
இதையும்படிங்க: இரட்டை சதம் போகட்டும் விடுங்க.. ஒரு தாத்தாவா ஜெய்ஸ்வால் இதை செய்வதையே விரும்புறேன்.. கவாஸ்கர் அட்வைஸ்
“ஒருவேளை அந்த 750 ரன்கள் அடிக்காமல் போயிருந்தால் கூட அதே ரன்களை அவர் அடுத்தச் சுற்றுப்பயணத்தில் அடித்திருப்பார். ஏனெனில் அவரிடம் தரம் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை ஒரு 25 வயது குழந்தையாக அவர் தரமான இங்கிலாந்துக்கு எதிராக தன்னையும் இளம் இந்திய அணியையும் கையாண்ட விதம் நன்றாக இருந்தது. கேப்டனாக உங்களுக்கு அதை விட ஒரு பெரிய சோதனை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” எனக் கூறினார்.