
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும், டெஸ்ட் போட்டிகளுக்கான துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது கால் விரலில் காயம் அடைந்தார். அதன்பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதன் காரணமாக ரிஷப் பண்டிற்கு மாற்று வீரராக தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நாராயணன் ஜெகதீசன் இந்திய அணியில் இணைந்துள்ளார். ஆனாலும் ஏற்கனவே இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியுடன் பயணித்து மாற்று விக்கெட் கீப்பராக விளையாடி வந்த துருவ் ஜுரேலே ஐந்தாவது போட்டியில் ரிஷப் பண்டிற்கு பதிலாக களமிறங்குவார் என்பது ஏற்கனவே உறுதி ஆகிவிட்டது.
அதுமட்டுமின்றி இந்த தொடரில் பல்வேறு முறை பண்ட் கீப்பிங் செய்ய முடியாமல் வெளியேறிய போதெல்லாம் களத்திற்கு வந்து விக்கெட் கீப்பர் பணியை சிறப்பாக மேற்கொண்டிருந்தார். இதனால் நிச்சயம் அவரே ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் நாளை ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கும் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துருவ் ஜுரேலை சந்தித்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு விடயங்களை அறிவுரைகளாக கூறியிருந்தார். அப்படி கம்பீர் ஜுரேலிடம் கூறியதாவது :
நீதான் இந்திய அணியின் முதுகெலும்பாக மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டும். ஏற்கனவே விக்கெட் கீப்பிங்கில் அசத்தியுள்ள நீ நிச்சயம் இந்த இங்கிலாந்து மண்ணில் பேட்டிங்கிலும் அசத்துவாய் என்று நம்புகிறேன். 5-ஆவது இடத்திலிருந்து 8-ஆவது இடம் வரை எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் களமிறக்கப்படலாம்.
இதையும் படிங்க : இந்திய மிருகத்தை தூண்டி விட்டாங்க.. 5வது டெஸ்டில் இங்கிலாந்தை தோற்கடிக்க இதுவே போதும்.. அஸ்வின் பேட்டி
போட்டியின் சூழலுக்கு ஏற்ப அந்த பேட்டிங் பொசிஷன் மாறும். அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று அவரை ஊக்கப்படுத்தி பேசியுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான துருவ் ஜுரேல் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 202 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.