வேறு வழியின்றி அரை மனதுடன் விராட் கோலியை பாராட்டிய கெளதம் கம்பீர் – பேசியது இதோ

Gambhir
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா பதிவு செய்த அசாத்தியமான வெற்றியின் தாக்கம் இன்னமும் ஓய்வில்லை என்றே கூறலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு பந்திலும் அனல் தெறித்த அந்த போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை இலக்கைத் துரத்தும் போது கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியா தோல்வியடைவது உறுதியென்று ரசிகர்கள் கவலையடைந்தனர்.

அப்போது விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து நங்கூரமாக 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா 40 (37) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது தினேஷ் கார்த்திக் பதற்றத்தில் ஸ்டம்பிங் ஆகி சென்றதால் ஏற்பட்ட பரபரப்பில் பதற்றமடையாத ரவிச்சந்திரன் அஷ்வின் அடுத்த பந்தில் அதே ஒய்ட் வலையில் சிக்காமல் அதற்கடுத்த பந்தை தூக்கி அடித்து இந்தியாவை 20 ஓவர்களில் 160/6 ரன்களை எடுக்க வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றிக்கு கதை முடிந்ததாக கருத்தப்பட்ட போது சூப்பர்மேனை போல் அபாரமாக பேட்டிங் செய்து 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

வேறு வழியின்றி:
அறிமுகமானது முதல் கடந்த 15 வருடங்களில் இப்படி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் கடந்த 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்த போது ரிக்கி பாண்டிங் போன்ற வெளிநாட்டவர்கள் ஆதரவு கொடுத்தனர். ஆனால் அந்த நன்றியை மறந்த நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை மாறாக அணியிலிருந்து நீக்குமாறு மனசாட்சியின்றி விமர்சித்தனர். இருப்பினும் அதற்காக கோபித்துக் கொள்ளாமல் சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து பார்முக்கு திரும்பிய விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் 50, 100 போன்ற சொந்த சாதனைகளுக்காக சுயநலமாக விளையாடாமல் இந்தியா கோப்பையை வெல்லும் அளவுக்கு விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியாயமின்றி விமர்சித்தார்.

பொதுவாக சிறப்பாக விளையாடினாலும் விராட் கோலியை விமர்சிக்கும் அவர் இப்போட்டியில் தனி ஒருவனாக வெற்றியை பெற்று கொடுத்ததால் வேறு வழியின்றி அரை மனதாக பாராட்டியுள்ளார். ஏனெனில் ட்விட்டர் உட்பட சமூக வலைதள பக்கங்களில் விராட் கோலியை அனைவரும் ஹீரோவாக கொண்டாடும் நிலையில் அவர் மட்டும் அவரது பெயரை ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் இந்தியா தாமாக வென்றதை போல் இந்தியாவை மட்டும் பாராட்டியிருந்தார். அதற்கு ரசிகர்கள் வழக்கம் போல அதிருப்தி தெரிவித்தனர்.

- Advertisement -

ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்படும் அவர் டிவி தொகுப்பாளர் விராட் கோலியின் இன்னிங்ஸ் பற்றி கேட்ட போது பொது இடத்தில் நேரலையில் எதுவும் பேச முடியாது என்பதால் வேறு வழியின்றி பாராட்டி பேசியது பின்வருமாறு. “போட்டியை வெற்றிகரமாக முடிப்பது நீங்கள் மேற்கொண்டு 50% எக்ஸ்ட்ரா ரன்களை எடுப்பதற்கு சமம். எனவே அவருடைய இந்த இன்னிங்ஸ் மொகாலி இன்னிங்ஸ் விட (2016 உலகக்கோப்பையில்) சிறந்தது. ஏனெனில் இதில் அழுத்தமும் சவாலும் அதிகப்படியாக இருந்தது.

குறிப்பாக அந்த ஷாட் (ஹாரீஸ் ரவூப் வீசிய 19வது ஓவரில்) இந்த உலக கோப்பையின் மிகச்சிறந்த ஷாட் என்று நினைக்கிறேன். அந்த ஷாட் மிகவும் அழுத்தத்தில் அடித்தது. ஒருவேளை அந்த ஷாட் மட்டும் அடிக்காமல் போயிருந்தால் இந்தியா அதிகப்படியான அழுத்தத்தை சந்தித்து 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டிருக்கும். அதனால் தோல்வியும் நிச்சயமாக கிடைத்திருக்கும். எனவே ஹாரீஸ் ரவூப்’க்கு எதிராக அவர் அடித்த ஷாட் மிகவும் தரமானது. அதைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகள் போதாது” என்று கூறினார்.

இதையும் படிங்க : விராட் கோலியின் கடைசி ஓவர் சர்ச்சைக்கு தலைசிறந்த அம்பயர் சைமன் டௌபல் கூறுவது என்ன?

அவர் கூறுவது போல் காயத்திலிருந்து திரும்பிய சாஹீன் அப்ரிடியை விட தொடர்ந்து விளையாடி வரும் ஹாரீஸ் ரவூப் அப்போட்டியில் தொடர்ந்து 145 – 150 கி.மீ வேகத்தில் வீசி மிரட்டினார். அப்பேர்ப்பட்ட அவருடைய தரமான பந்தில் பின்னங்காலில் நின்று நேராக விராட் கோலி அசால்ட்டாக அடித்த சிக்ஸர் தான் இந்தியாவின் வெற்றியை தீர்மானித்தது என்பதில் சந்தேகமில்லை.

Advertisement