
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த ஊரில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார்.
சொல்லப்போனால் கடந்த 5 வருடங்களில் அவர் 3 சதங்கள் மட்டுமே அடித்து சுமாராக செயல்பட்டு வருவது இந்திய அணியின் தோல்விகளில் எதிரொலிக்கிறது. அந்த நிலையில் 5 வருடத்தில் 3 சதங்கள் மட்டுமே அடித்துள்ள விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டுக்கு உகந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என்று ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கூறியிருந்தார்.
எனவே ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடுமையான பதிலடி கொடுத்திருந்தார். இது பற்றி ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “பாண்டிங்கிற்க்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஆஸ்திரேலியா அணியை பற்றி சிந்திக்க வேண்டும்”
“எனக்கு எந்த கவலையும் இல்லை. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் கடினமான மனிதர்கள். அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய சாதித்துள்ளார்கள். எதிர்காலத்திலும் நிறைய சாதிக்கப் போகிறார்கள். இப்போதும் அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் என்பது முக்கியம். இப்போதும் ஆர்வத்துடன் இருக்கும் அவர்கள் நிறைய சாதிக்க விரும்புகிறார்கள் என்பதே என்னை பொறுத்த வரை முக்கியம்”
“குறிப்பாக கடந்த தொடரில் சந்தித்த தோல்வியால் இந்திய அணியில் தற்போது வெற்றிக்கான பசி அதிகமாக இருக்கிறது. இந்திய அணி தற்போது வருங்காலத்தையும் நோக்கி மாற்றங்கள் செய்யும் சூழ்நிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு 5 போட்டிகளில் விளையாட செல்கிறோம் என்பது மட்டுமே எனது மனதில் இருக்கிறது”
இதையும் படிங்க: உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல செய்தி காத்திருக்கு.. அதனால தான் ரோஹித் சர்மா இன்னும் – ஆஸ்திரேலியா போகல
“எங்கள் அணியில் அற்புதமான சாதனைகளை நிகழ்த்திய வீரர்கள் உள்ளார்கள். எனவே மாற்றங்கள் பற்றி நீங்கள் பேசிக் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்த வரை எங்கள் அணி வீரர்களிடம் இன்னும் நெருப்பு இருப்பதாகவே கருதுகிறேன். மாற்றங்கள் என்பது இந்திய கிரிக்கெட்டில் நடந்து கொண்டே இருக்கும். தற்சமயத்தில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெல்வதை பற்றி மட்டுமே யோசிக்கிறோம்” என்று கூறினார்.