கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை இரண்டு மாதமாக மகிழ்வித்த ஐபிஎல் 2024 சீசன் கோலாகலமாக நிறைவு பெற்றது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹைதெராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.
ஏனெனில் 2012, 2014இல் கேப்டனாக கோப்பையை வென்றுக் கொடுத்த அவர் இந்த வருடம் கொல்கத்தாவின் ஆலோசகராக பொறுப்பேற்றார். அந்தப் பதவிக்கு வந்ததும் சுனில் நரேனை துவக்க வீரராக கம்பீர் களமிறக்கினார். அதை பயன்படுத்திய சுனில் நரேன் ஆல் ரவுண்டராக அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருது வென்று கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார்.
கம்பீரின் லட்சியம்:
அந்த வகையில் கௌதம் கம்பீர் நிகழ்த்திய சில அதிரடியான மாற்றங்கள் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவியது. மேலும் தற்போது 3வது கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா அணி சென்னை, மும்பையை தொடர்ந்து 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் 3வது கோப்பையை தற்காலிகமாக மட்டுமே மகிழ்ச்சியை கொடுப்பதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்னும் 3 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக கொல்கத்தா முன்னேறினால் மட்டுமே தமக்கு முழுமையான மகிழ்ச்சி என்று கம்பீர் கூறியுள்ளார். எனவே மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளை முந்தி கொல்கத்தாவை வெற்றிகரமாக அணியாக முன்னேற்றம் பயணத்தை துவங்கியுள்ளதாக எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“என்னைக் நீங்கள் கேட்டால் இப்போதும் நாங்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை விட 2 கோப்பைகள் பின்தங்கியுள்ளோம். ஆம் நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் இன்னும் அங்கே பசி இருக்கிறது. ஏனெனில் நாங்கள் இன்னும் ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணியாக வரவில்லை. அந்த இடத்திற்கு வருவதற்கு நாங்கள் இன்னும் 3 கோப்பைகளை வெல்ல வேண்டும்”
இதையும் படிங்க: டெல்லி பசங்க இப்படி தான் செய்வோம்.. கோலி மாதிரி 4 பேர் என்ன செஞ்சாங்க தெரியுமா? ஹர்ஷித் ராணா
“இன்னும் 3 கோப்பைகளை வெல்வதற்கு நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். எனவே அடுத்த லட்சியம் கொல்கத்தாவை சிறந்த அணியாக மாற்ற முடிந்தால் அதை விட சிறந்த உணர்வு எதுவுமில்லை” என்று கூறினார். இந்த நிலையில் கௌதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. ஒருவேளை அது நடந்து விட்டால் கொல்கத்தா இன்னும் 3 கோப்பைகளை வென்று சென்னை மற்றும் மும்பையை முந்துவது கடினம் என்றே சொல்லலாம்.



