- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இலங்கை அணிக்கெதிரான தொடரில் இவர்தான் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் – கங்குலி அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிராக அடுத்த மாதம் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணியானது பங்கேற்க இருக்கிறது. விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய முன்னனி வீரர்கள் அடங்கிய இந்திய டெஸ்ட் அணியானது இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதால், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்கள் கொண்ட இரண்டாவது இந்திய அணியே பங்கு பெறும் என்று இதற்கு முன்னராகவே அறிவித்திருந்தார் பிசிசிஐயின் தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை தொடருக்கான இந்திய அணியை அறிவித்திருந்தது பிசிசிஐ. ஷிகர் தவான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அந்த அணியில் நெட் பவுலர்களுடன் சேர்த்து மொத்தம் 25 வீரர்கள் இடம்பிடித்து இருக்கின்றனர். கங்குலி கூறியது போலவே பல இளம் வீரர்களுக்கு இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்திருந்தாலும், இந்த தொடருக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக யார் செயல்படபோகிறார் என்ற எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாமல் இருந்து வந்தது.

- Advertisement -

இந்நிலையில் தலைமைப் பயிற்சியாளராக யார் செயல்படபோகிறார் என்பதையும் தற்போது தெரிவித்து உள்ளார் சவுரவ் கங்குலி. ஐபிஎல்லின் இரண்டாவது பாதி போட்டிகளை ஐக்கிய அமீரகத்தில் நடத்தும் ஏற்பாட்டில் மும்மரமாக ஈடுபட்டு கொண்டிருந்த அவரிடம் பேட்டியெடுத்த ஒரு தனியார் நாளிதழ், இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக யார் நியமிக்கப்பட்டிருக்கிறார்? என்ற கேள்வியை எழுப்பியது. இதற்கு பதிலளித்த அவர், ராகுல் ட்ராவிட் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பதில் கூறியுள்ளார்.

ஏற்கனவே ட்ராவிட்தான் இந்த தொடருக்கான பயிற்சியாளராக இருப்பார் என்று அனைவரும் தங்களது கருத்துகளை கூறிவந்த நிலையில் அதனை தற்போது சவுரவ் கங்குலி உறுதி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை செல்லும் இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் பல வீரர்கள் ஏற்கனவே ராகுல் ட்ராவிட் பயிற்சியின்கீழ் விளையாடி இருப்பதால் அவர்களை எப்படி இந்த தொடருக்கு தயார்படுத்துவது என்பதை ராகுல் ட்ராவிட் நன்றாகவே அறிந்து வைத்திருப்பார்.

மேலும் ட்ராவிட்டின் பயிற்சியின் கீழ் விளையாடுவதால் அந்த இளம் வீரர்களுக்கும் ஒரு உத்வேகம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை சென்ற பின்னர் முதலில் ஒரு நாள் தொடரில் பங்கு பெறும் இந்திய அணியானது அடுத்ததாக டி20 தொடரில் பங்கு பெற இருக்கிறது. கொரானா பரவல் காரணமாக இந்த போட்டிகள் அனைத்தும் கொழும்பு மைதானத்தில் மட்டுமே நடைபெற இருக்கிறது.

- Advertisement -
Published by