
ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் சுமாராக விளையாடிய இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.
அதனால் 1 – 1* என்ற கணக்கில் சமனில் இருக்கும் இந்தத் தொடரை வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அடுத்த போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. அந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் இருக்கும் புகழ்பெற்ற காபா மைதானத்தில் துவங்க உள்ளது.
இந்த மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 32 வருடங்களாக இந்த மைதானத்தில் தோல்வியை சந்திக்காததால் அங்கே வந்து எங்களுடன் மோதிப் பாருங்கள் என்று 2021 தொடரில் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைன் இந்தியாவின் அஸ்வினுக்கு சவால் விட்டார். கடைசியில் ரஹானே தலைமையில் நடராஜன் போன்ற இளம் வீரர்களுடன் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை காபா மைதானத்தில் இந்தியா தோற்கடித்து வென்றது.
குறிப்பாக சுப்மன் கில் 91, ரிஷப் பண்ட் 89* ரன்கள் குவித்து வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்கள். இந்நிலையில் இம்முறையும் காபா பிட்ச் அதே போல வேகம், பவுன்ஸ், கேரி ஆகியவற்றுடன் இருக்கும் என்று அதன் தயாரிப்பாளர் டேவிட் சண்டுர்ஸ்கி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வருடத்தின் வெவ்வேறு நேரங்களை போல கண்டிப்பாக அது சற்று வித்யாசமாக இருக்கலாம்”
“சீசனின் பிற்பகுதியில் உள்ள பிட்ச்கள் சற்று அதிகமாக தேய்மானம் அடையலாம். அதே சமயம் ஆரம்பத்தில் பிட்ச்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பொதுவாக ஒவ்வொரு முறையும் நாம் பேசுவதைப் போல காபா என்றால் அனைவருக்கும் தெரிந்த நல்ல கேரி, வேகம், பவுன்ஸ் ஆகியவற்றை இம்முறையும் எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு வருடத்தை போல இம்முறையும் நாங்கள் கலாச்சாரம் நிறைந்த காபா பிட்ச்சை உருவாக்க முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: க்ளீன் போல்டாவதை தவிர்க்க ரோஹித் இந்த டெக்னிக்கை மாற்றி.. தியாகம் செஞ்சாகனும்.. புஜாரா அட்வைஸ்
அந்த வகையில் 2021 போல இம்முறையும் காபா மைதானம் வேகம், பவுன்ஸ் ஆகியவை நிறைந்ததாக இருக்கும் என்று நம்பலாம். அதில் வெற்றி பெறுவதற்கு 2021இல் பின்பற்றிய திட்டங்கள், அனுபவங்களை இம்முறையும் இந்திய அணி பயன்படுத்துவது அவசியமாகிறது. மேலும் காபா மைதானம் தற்போது இந்திய அணிக்கு கொஞ்சம் ராசியாகவும் இருப்பதால் இங்கே தைரியமாக விளையாடினால் வெற்றி கிடைக்கலாம்.