பாதியில் வந்து இன்று ஆர்சிபி ஹீரோவாக மாறிய இளம் வீரரின் சூப்பர் கதை – சுவாரசிய தகவல் இதோ

Rajat Patidar 112 2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் நாக்-அவுட் சுற்று போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 25-ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3, 4 ஆகிய இடங்களை பிடித்த லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் சந்தித்தன. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மழையால் 8.10 மணிக்கு தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 207/4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் டுப்லஸ்ஸிஸ் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க பார்மின்றி தவிக்கும் மற்றொரு நட்சத்திரம் விராட் கோலி 25 (24) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

Avesh Khan

- Advertisement -

அந்த சமயத்தில் வந்த கிளன் மேக்ஸ்வெல் 9 (10) மஹிபால் லோம்ரோர் 14 (9) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்னில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். ஆனாலும் டுப்லஸ்ஸிஸ் அவுட்டான பின் களமிறங்கி நங்கூரமாக பேட்டிங் செய்த இளம் வீரர் ரஜத் படிடார் பொறுப்புடனும் அதிரடியாகவும் ரன்களை குவித்து பெங்களூருவை மீட்டெடுத்தார்.

பெங்களூரு வெற்றி:
சுள்ளானை போல லக்னோ பவுலர்களை பிரித்து மேய்ந்த அவர் கடைசி நேரத்தில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து கடைசி வரை அவுட்டாகாமல் 12 பவுண்டரி 7 சிக்சருடன் 112* (54) ரன்களை விளாசி ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் போட்டிகளில் குறிப்பாக எலிமினேட்டர் போட்டியில் சதமடித்த முதல் பேட்ஸ்மன் என்ற மாபெரும் வரலாற்று சாதனை படைத்தார். அவருடன் தினேஷ் கார்த்திக் தனது பங்கிற்கு 5 பவுண்டரி 1 சிக்சருடன் 37* (23) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதை தொடர்ந்து 208 என்ற கடினமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு முதல் ஓவரிலேயே குயின்டன் டி காக் 6 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த மன்னன் வோஹ்ரா 19 (11) ரன்களில் நடையை கட்டினார்.

Rajat Patidar 112

அதனால் 41/2 என சுமாரான தொடக்கத்தைப் பெற்ற அந்த அணிக்கு மறுபுறம் நங்கூரமாக நின்று நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் கேஎல் ராகுல் அடுத்து வந்த தீபக் ஹூடாவுடன் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தார். இதில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் தீபக் ஹூடா 45 (26) ரன்களில் ஆட்டமிழக்க கடைசி நேரத்தில் கேஎல் ராகுலும் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 79 (58) ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அதைப் பயன்படுத்திய பெங்களூரு அடுத்து வந்த ஸ்டோனிஸ் 9 (9) க்ருனால் பாண்டியா 0 (1) ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கியதால் 20 ஓவர்களில் 193/6 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ 14 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இதனால் ஐபிஎல் 2022 தொடருடன் அந்த அணி பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

அசத்திய ரஜத்:
பெங்களூரு சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹேசல்வுட் 3 விக்கெட்டுக்கள் எடுக்க இந்த வெற்றியால் மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் காத்திருக்கும் ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்த பெங்களூரு தகுதி பெற்றது. தோல்வியடைந்தால் வெளியேற வேண்டும் என்ற மிகப்பெரிய அழுத்தம் நிறைந்த இந்த எலிமினேட்டர் போட்டியில் விராட் கோலி, டுப்லஸ்ஸிஸ், கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திரங்கள் சொதப்பிய போதிலும் பயமறியாத காளையாக சீறி பாய்ந்த ரஜத் படிடார் தனி ஒருவனாக சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

patidar 1

1. இந்தூரை சேர்ந்த 28 வயது இளம் வீரரான இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மத்திய பிரதேசத்துக்காக அசத்தியதால் கடந்த 2021இல் முதல் முறையாக பெங்களூருவுக்கு வெறும் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டாலும் 4 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப் பட்டார்.

- Advertisement -

2. அதில் வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்த காரணத்தால் இந்த வருடம் பிப்ரவரியில் நடந்த ஏலத்தில் அவரை அந்த அணியும் வாங்கவில்லை. அந்த நிலைமையில் துவங்கி நடைபெற்ற ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த லூவினித் சிசோடியா காயத்தால் விலகியதால் இவரை பெங்களூர் அணி நிர்வாகம் மீண்டும் 20 லட்சத்துக்கு வாங்கியது.

வெற்றிநாயகன்:
இந்த வருடமும் லீக் சுற்றில் 6 வாய்ப்பு பெற்ற அவர் பெரிய அளவில் ரன்களை எடுக்காத நிலையில் நேற்றைய வாழ்வா – சாவா போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் முழு திறமையை வெளிப்படுத்தி அபாரமாக பேட்டிங் செய்து பாதியில் வந்த பெங்களூருவின் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும். ஏனெனில் லீக் சுற்று போட்டிகளை விட நாக்-அவுட் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு சதம் அடிப்பதே 1000 ரன்களுக்கு ஈடானதாகும்.

இதையும் படிங்க : ரசிகர்களை கைதட்டி பாராட்ட வைத்த ரஜத் படிதார் ! ஆர்சிபியின் வெற்றி நாயகனாக படைத்த 8 சாதனை பட்டியல் இதோ

இது பற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் 2022 ஏலத்தில் நான் விலை போகவில்லை. ஆனால் அது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும் தொடர்ந்து எனது பேட்டிங்கில் முன்னேற்றத்தை கொண்டு வர முயற்சித்தேன்” என்று கூறினார். மேலும் அழுத்தம் நிறைந்த தருணங்களில் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று என அவரைப் பாராட்டிய விராட் கோலி வரும் காலங்களில் இவரையும் இவரின் பெயரையும் அதிகமாக ரசிகர்கள் உச்சரிப்பார்கள் என்று பாராட்டினார்.

Advertisement